

அயோத்தி ராமர் கோவிலை நிர்வகிக்கும் ராம ஜென்பபூமி அறக்கட்டளைக்கு வந்த நாண்கொடை ஊழியர்களால் கையாடல் செய்யப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள சூழலில் பாஜக மீது விமர்சனங்கள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில் பாஜக இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் பக்கம் திருப்பியுள்ளது.
அயோத்தி ராமர் கோவிலுக்குப் பெறப்பட்ட நன்கொடைப் பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களைக் கையாடல் செய்த வழக்கில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்குத் தொடர்பு இருப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
சமாஜ்வாதி, உத்தரப் பிரதேசத்தின் பிரதான எதிர்க்கட்சி ஆகும். அதன் தலைவர் அகிலேஷ் யாதவ், நன்கொடை திருட்டில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கடுமையாக விமர்சித்து வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரான ரமாசங்கர் யாதவ் என்கிற டின்னு யாதவ் என்பவருடன் அகிலேஷ் யாதவ் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் அஜய் அலோக் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அவர் பேசுகையில்,
"இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் சமாஜ்வாதி கட்சியின் பின்னணி படிப்படியாக வெளிவரத் தொடங்கியுள்ளது. குற்றவாளி டின்னு யாதவ், அகிலேஷ் யாதவுடன் பலமுறை தொலைபேசியில் பேசியதற்கான ஆவணங்கள் அரசிடம் உள்ளன.
இந்த வழக்கின் முழு விவரங்களும் வெளிவரும் போது, இந்த முறைகேடுகளுக்குப் பின்னால் இருக்கும் உண்மையான சூத்திரதாரிகளை நாடு அறிந்துகொள்ளும். சமாஜ்வாதி கட்சியால் துறவிகள் மற்றும் சாமியார்களின் கோபத்தைத் தாங்கிக்கொள்ள முடியாது." என தெரிவித்துள்ளார்.
மறுபுறம் ராமர் கோவில் விவகாரத்தில் ரூ.20,000 கோடி நில ஊழல் மற்றும் நன்கொடை முறைகேடு புகார்களைச் சுமத்திய எதிர்க்கட்சித் தலைவர்களை விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான அலோக் குமார், முறைகேடான விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, சமாஜ்வாதி கட்சியின் ராம் கோபால் யாதவ், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சஞ்சய் சிங் ஆகியோரை விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டும் இந்தத் தலைவர்களிடம், அவர்கள் எந்த அடிப்படையில் இந்த ஆதாரங்களை வெளியிட்டார்கள், இதற்கான ஆவணங்கள் அவர்களிடம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஆதாரங்கள் இருந்தால் அதனை சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.