PM Modi | பெங்களூருவில் 7 பேர் உயிரை பறித்த கோர சம்பவம்... பிரதமர் மோடி இரங்கல்

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
PM Modi | பெங்களூருவில் 7 பேர் உயிரை பறித்த கோர சம்பவம்... பிரதமர் மோடி இரங்கல்
Published on

பெங்களூருவில் கனமழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் உயிரிழந்த 7 பேருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். மேலும், உயிரிழந்தோர் குடும்பத்தார் மற்றும் காயமடைந்தவர்களுக்கு நிவாரண தொகை அறிவித்தார்.

இதுகுறித்த எக்ஸ் தளப் பதிவில் அவர், "கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சுவர் இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்து மிகவும் துயரமானது. துயரத்தில் வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-மும் வழங்கப்படும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக பெங்களூருவில் பெய்த அதீத கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக, சிவாஜிநகர் பகுதியில் அமைந்துள்ள பவுரிங் மற்றும் லேடி கர்சன் மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், மழையிலிருந்து தப்பிக்க சுவரின் ஓரம் ஒதுங்கியிருந்த நடைபாதை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என 7 பேர் உயிரிழந்தனர், மேலும் 7 பேர் காயமடைந்தனர்.

பலியான 7 பேரில் 3 குழந்தைகளும் அடங்குவர். அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்து இருந்தார். துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் மற்றும் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மீட்புப் பணிகள் மற்றும் காயமடைந்தவர்களுக்கான சிகிச்சைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com