98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் செயல்படுத்த வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் செயல்படுத்த முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் செயல்படுத்த வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்
Published on

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. அரசு ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தந்திருக்கிறது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பது, வேலையில்லாமல் தவித்துக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்திருக்கிறது. கடந்த ஆறு வருட அ.தி.மு.க. ஆட்சியில் இளைஞர்களுக்கு எவ்வித வேலைவாய்ப்பும் உருவாக்காத காரணத்தால் 84 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு, எப்போது வேலை கிடைக்கும் என்று காத்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் தேர்தல் விளம்பரத்திற்காக அவசர அவசரமாக வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி நியமன ஆணைகளை அ.தி.மு.க. அமைச்சர்கள் வழங்கினார்கள். அப்படி நியமன ஆணைகள் பெற்றவர்கள் இதுவரை வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டிருக்கும் அவல நிலைமை தொடருகிறது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் நியமன ஆணைகள் பெற்றவர்களுக்கே இன்னும் வேலை கிடைக்கவில்லை.

அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்திற்கு வரவேண்டிய பல தொழிற்சாலைகள் அண்டை மாநிலங்களுக்குச் சென்றுவிட்டன. தொழில் தொடங்க அனுமதி வழங்குவதில் தலைவிரித்தாடும் ஊழலும், நிர்வாகச் சீர்கேடுகளுமே இதற்கு முக்கிய காரணங்கள். ரூ.4 ஆயிரம் கோடியில் சென்னையில் இரண்டாவது கார் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட்டு விட்டு, போர்டு நிறுவனம் குஜராத் மாநிலத்திற்குச் சென்றது. ஜப்பான் நாட்டின் நிறுவனம் ரூ.3 ஆயிரம் கோடியில் சென்னையில் புதிய கார் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்ட நிலையில், அதனைக் கைவிட்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டிக்கு சென்றுவிட்டது. ரூ.2,400 கோடியில் இரு சக்கர தொழிற்சாலை தொடங்கவிருந்த ஹீரோ மோட்டார் நிறுவனம், அந்தத் திட்டத்தை கைவிட்டு, ஆந்திர மாநிலம் சித்தூருக்கு சென்றுவிட்டது.

பிரான்ஸ் நாட்டின் அல்ஸ்டோம் நிறுவனம் சென்னையில் மெட்ரோ ரெயில் பெட்டிகள் தயார் செய்யும் திட்டத்தை கை விட்டு ஆந்திராவின் ஸ்ரீசிட்டிக்கு சென்றுவிட்டது. இப்போது 7 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்து வருடத்திற்கு மூன்று லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் கியா மோட்டார் நிறுவனமும் ஆந்திராவிற்கு சென்று விட்டது.

கியா மோட்டார் நிறுவனம் கார் தொழிற்சாலை அமைக்க அனுமதி வழங்கவேண்டும் என்றால் திட்ட மதிப்பீட்டில் பாதித்தொகையை லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டார்கள் என்ற செய்தி பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கிறது. எங்கும் நிலவும் ஊழல், கமிஷனால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு வரும் தொழிற்சாலைகள் எல்லாம் அண்டை மாநிலங்களுக்கு சென்று கொண்டிருப்பது ஒருபுறமிருக்க, அ.தி.மு.க. அரசில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை.

சுமார் 2.48 லட்சம் கோடி முதலீடு பெறப்போகிறோம் என்று கூறி 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டது அ.தி.மு.க. அரசு. அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன. புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகவில்லை.

கமிஷன் கொடுத்தால்தான் தொழில் துவங்க அனுமதி பெறமுடியும் என்ற வெட்கங்கெட்ட நிலைமை அ.தி.மு.க. ஆட்சியில் நிலவுகிறது. சிப்காட் போன்ற நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகள் மட்டுமல்ல- தொழில்துறையில் இருக்கும் அதிகாரிகளே அமைச்சர்களின் ஏஜெண்டுகளாக செயல்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் தொழில் தொடங்க யாரும் முன்வர மறுப்பதால், மாநிலத்தின் தொழில் வளர்ச்சி இன்றைக்கு அதல பாதாளத்திற்குச் சென்றுவிட்டது. இந்திய மாநிலங்களில் கமிஷன் கலாசாரத்தில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்கி தலைகுனிவை ஏற்படுத்தியதுதான் அ.தி.மு.க. அரசின் கடந்த ஆறாண்டு கால வேதனை நிறைந்த சாதனை.


தொழில் வளர்ச்சி குறித்தோ, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்குவது குறித்தோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காத அ.தி.மு.க. அரசின் முதல்-அமைச்சர் ஒரு லட்சம் பேருக்கு வேலை கொடுத்தோம் என்பது அப்பட்டமான பொய்ப்பிரசாரம். முதல்-அமைச்சரின் இந்தப் பேச்சு வேலைவாய்ப்பு இல்லாமல் திண்டாடும் இளைஞர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துவதாக இருப்பது மட்டுமின்றி, எவ்வித வேலைவாய்ப்பு திட்டங்களையும் உருவாக்காமல் விளம்பரத்திற்கு மட்டுமே பேசுவதாக அமைந்திருக்கிறது. முதல்-அமைச்சரின் பேச்சு பொதுக்கூட்ட மேடைக்கு பயன்படும் பிரசாரமாக இருக்கலாம். ஆனால் வேலை இல்லாத இளைஞர்கள் வேலை பெறுவதற்கு இந்தப் பேச்சு எவ்விதத்திலும் உதவாது என்பதை முதல்-அமைச்சர் உணர வேண்டும்.

ஆகவே விளம்பரத்திற்கான பேச்சுக்களை தவிர்த்துவிட்டு, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் செயல்படுத்த முதல்-அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பணிகளில் உள்ள காலியிடங்களுக்கு கமிஷன், கரெப்ஷன் இல்லாமல் வெளிப்படைத்தன்மையுடன் பணி நியமனங்களை செய்யவேண்டும் என்பதோடு, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டுக் காத்திருக்கும் 84 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஆக்கப்பூர்வமான திட்டங்களை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று முதல்-அமைச்சரை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com