

மதுரை:
திருமங்கலத்தில் ரூ.11 கோடியே 36 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள அரசு கலைக்கல்லூரியின் திறப்பு விழா வருகிற 7-ந் தேதி நடைபெறுகிறது. முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கல்லூரி கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.
முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு திருமங்கலம் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்துக்கு தலைமை தாங்கிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது:-
ஜெயலலிதா மறைந்த பிறகு இந்த இயக்கம் அவர் காட்டிய வழியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நல்லாட்சி நடத்துகிறார். ஆனால் இந்த இயக்கம் மற்றும் ஆட்சியை வீழ்த்த சிலர் சூழ்ச்சி செய்கிறார்கள்.
தனிநபரை முன்னிறுத்தி நடைபெறும் இந்த சூழ்ச்சியை அ.தி.மு.க. தொண்டர்கள் முறியடிப்பார்கள். ஜெயலலிதா நியமித்த நிர்வாகிகளை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. அவர் நியமித்த நிர்வாகிகளை நீக்கி குழப்பம் விளைவிப்பவர்களுக்கு நாம் ஜெயலலிதா காட்டி வழியில் சென்று மக்கள் பணியாற்றுவதன் மூலம் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.
கல்லூரியை திறந்து வைக்க வரும் முதல்வரை வரவேற்க ஒரு லட்சம் பேர் திரள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆலோசனை கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் ராஜன்செல்லப்பா, நீதிபதி, திருமங்கலம் அரசு கலைக் கல்லூரி முதல்வர் சோமசுந்தரம், முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயராமன், துணை செயலாளர் அய்யப்பன், முன்னாள் யூனியன் சேர்மன் தமிழழகன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், மகாலிங்கம், ராமசாமி, தொகுதி செயலாளர் ஆண்டிச்சாமி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திருப்பதி, நிர்வாகிகள் சுகுமார், செல்வம், கல்லூரி அலுவலர் வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.