எடப்பாடி அரசு மெஜாரிட்டி இழப்பு: ஜனாதிபதியை சந்திக்க தி.மு.க - 4 கட்சிகள் முடிவு

எடப்பாடி பழனிசாமி அரசு மெஜாரிட்டி இழந்த நிலையில் கவர்னர் மவுனமாக இருப்பது குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் முறையிட தி.மு.க. - 4 கட்சிகள் முடிவு செய்துள்ளது.
எடப்பாடி அரசு மெஜாரிட்டி இழப்பு: ஜனாதிபதியை சந்திக்க தி.மு.க - 4 கட்சிகள் முடிவு
Published on

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு 21 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்களான அவர்கள் ஓ.பி.எஸ். அணியை இணைத்துக் கொண்டதை கண்டித்து போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஆட்சியைக் கவிழ்ப்பது தங்கள் நோக்கம் அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ள அந்த 21 எம்.எல்.ஏ.க்களும், முதல்-அமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

கடந்த வாரம் அந்த 21 எம்.எல்.ஏ.க்களில் 19 பேர் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து எடப்பாடி பழனிசாமிக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறி தனித்தனியாக கடிதம் கொடுத்தனர். இதையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

அ.தி.மு.க.வின் மொத்த எம்.எல்.ஏ.க்களான 134 பேரில் 21 பேர் டி.டி.வி.தினகரனை ஆதரிப்பதால் எடப்பாடி பழனிசாமிக்கு 113 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவே உள்ளது. இது பெரும்பான்மை பலத்துக்கு தேவையான 117-க்கு நான்கு குறைவாக இருக்கிறது.

அ.தி.மு.க. ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ள கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோரும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உள்ளனர். எனவே சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை எடப்பாடி பழனிசாமி இழந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி, தமிழக அரசை கலைக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தி.மு.க. - காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் சார்பில் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், “எடப்பாடி பழனிசாமி தனக்கு இருக்கும் மெஜாரிட்டியை சட்டசபையில் நிரூபித்து காட்ட கவர்னர் உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று கவர்னர் வித்யாசாகர் ராவ், சட்டசபை கூட்டத்தில் மெஜாரிட்டியை நிரூபித்து காட்டுமாறு எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கவர்னர் வித்யாசாகர் ராவ் இந்த விவகாரத்தில் எந்தவித உத்தரவையும் வெளியிடவில்லை. தொடர்ந்து மவுனமாக உள்ளார்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கொடுத்த கடிதத்தையோ, தி.மு.க., காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கொடுக்கப்பட்ட கடிதங்களையோ கவர்னர் வித்யாசாகர் ராவ் கண்டு கொள்ளவில்லை. தி.மு.க. மனுவை ஏற்றுக் கொண்டாரா அல்லது நிராகரித்து விட்டாரா? என்று எதுவுமே அவர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை.

இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து பேச தி.மு.க. முடிவு செய்துள்ளது. தி.மு.க.வுடன் காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய 4 கட்சிகளின் பிரதிநிதிகளும் சேர்ந்து ஜனாதிபதியை சந்தித்து மனு கொடுப்பார்கள் என்று தெரிய வந்துள்ளது. இதற்காக 5 கட்சிகள் குழு சார்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தங்களை சந்திக்க நேரம் ஒதுக்கி தர வேண்டும் என்று 5 கட்சிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியை சந்திக்கும் வகையில் அவர்கள் கொடுக்கும் மனுவில், “எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபித்து காட்ட கவர்னர் உத்தரவிட தாங்கள் அறிவுறுத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுக்க திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக தி.மு.க.வைச் சேர்ந்த பாராளுமன்ற மேல்-சபை எம்.பி. திருச்சி சிவா கூறியதாவது:-

தமிழ்நாட்டில் தற்போது எந்த அரசும் இல்லை. அ.தி.மு.க. தன்னையும், தனது அரசையும் காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கிறது. மக்கள் பிரச்சினைகள் பற்றி ஆட்சியாளர்கள் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

இந்த அரசு மீது கவர்னர் முன்பே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தினகரனின் 19 எம்.எல்.ஏ.க்கள் தனித்தனியாக கடிதம் கொடுத்த உடனே அதை ஏற்று சட்டசபையை கூட்ட கவர்னர் உத்தரவிட்டிருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த எம்.பி. டி.ராஜா கூறுகையில், அ.தி.மு.க. இரு அணி தலைவர்களின் கையை பிடித்து சேர்த்து வைக்கும் வேலையை கவர்னர் செய்துள்ளார். கவர்னர் மீது எங்களுக்கு சந்தேகமாக உள்ளது. இந்த நிலையில் நாங்கள் அடுத்து ஜனாதிபதியை சந்தித்து தானே புகார் அளிக்க வேண்டியதுள்ளது” என்றார்.

காங்கிரஸ் தலைவர் அனந்த் சர்மா இந்த விவகாரம் குறித்து கூறுகையில், “தமிழக அரசு மெஜாரிட்டியுடன் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. எனவேதான் முதல்-அமைச்சர் சட்டசபையில் தனக்கு இருக்கும் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. ஆனால் கவர்னர் ஏன் ஆட்சிக்கு முட்டுக்கொடுத்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை” என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com