

சென்னை:
காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பிரின்ஸ் பேரவை விதி 56-ன் கீழ் கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் தண்டி யாத்திரையை நினைவுபடுத்தும் விதமாக 12.3.2020 அன்று நடந்த மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பேரணியில் காங்கிரஸ் கட்சியினர் மீது போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பினார்.
இது குறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டசபையில் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-
காந்தியடிகள் தண்டி யாத்திரை சென்ற தன் நினைவாக, இளைஞர் காங்கிரஸ் சார்பில், 12.3.2020 அன்று கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் காமராஜர் சிலை சந்திப்பில் இருந்து இரணியல் சந்திப்பு வரை, அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் என்பவர் பாத யாத்திரை செல்ல அனுமதி கோரி, கடந்த 10.3.2020 அன்று குளச்சல் காவல் நிலையத்தில் மனு அளித்தார்.
பாத யாத்திரை செல்ல உள்ள சாலை, போக்குவரத்து நெருக்கடியான சாலை என்பதாலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதாலும், பாத யாத்திரைக்கு அனுமதி மறுத்து அதற்கான குறிப்பாணையை காவல்துறையினர் அவரிடம் வழங்கியுள்ளனர். அதனையும் மீறி, 12.3.2020 அன்று பாத யாத்திரை செல்வதற்கான முயற்சிகளை அவர் மேற்கொண்டு வந்ததால், அப்பகுதியில் காவல்துறையினர் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தனர்.
இந்நிலையில், அன்றைய தினம் குளச்சல் அண்ணா சிலை சந்திப்பு அருகே காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் இளைஞர் காங்கிரசைச் சேர்ந்த சுமார் 25 பேர் கூடியுள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர், அனுமதியில்லாமல் பாத யாத்திரை மேற்கொள்ளக்கூடாது என மீண்டும் கூறியதையடுத்து, அவர்கள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அனுமதி கோரினர். அதனை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர், அதற்கு மட்டும் அனுமதி அளித்தனர்.
இதற்கிடையே, அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் தலைமையில் 21 இளைஞர் காங்கிரசைச் சேர்ந்தவர்கள், காமராஜர் சிலையிலிருந்து, சற்று தொலைவில் அமைந்துள்ள அண்ணா சிலை சந்திப்பு அருகே அனுமதியின்றி கூடி பாதயாத்திரை செல்ல முற்பட்ட போது, காவல் துறையினர் அவர்களிடம் அனுமதியின்றி பாதயாத்திரை செல்லக்கூடாதென்று கூறி, அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
ஆனால், அவர்கள் காவல் துறையினரின் அறிவுரையை ஏற்க மறுத்து பாத யாத்திரையாக செல்ல முற்பட்ட போது அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அவர்கள் காவல் துறையினரை அவதூறாக பேசியதோடு மட்டுமல்லாமல், போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் இடையூறாக சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து செல்லுமாறு அவர்களை காவல் துறையினர் பலமுறை கேட்டுக் கொண்டும், அவர்கள் கலைந்து செல்லாததால், காவல் துறையினர் அவர்களை அப்புறப்படுத்த முற்பட்டனர். இதற்கும் அவர்கள் ஒத்துழைக்காமல், காவல் துறையினருடன் வாய்த்தகராறில் ஈடுபட்டும், பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியும் உள்ளனர்.
இச்சம்பவத்தில் நான்கு காவல் ஆய்வாளர்கள் காயமடைந்தனர். ஒரு காவல் வாகனத்தின் கண்ணாடியும் சேதமடைந்தது. இதனையடுத்து, காவல் துறையினர் அவர்களை கைது செய்தனர். இச்சம்பவத்தில் காயமடைந்த காவல் ஆய்வாளர்கள், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட 21 பேர்களில், லாரன்ஸ் உள்ளிட்ட 6 பேர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மீதமுள்ள 15 பேர் காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
அனுமதியின்றி கூடி, பாத யாத்திரை செல்ல முயன்று, சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பாகவும், காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கியது தொடர்பாகவும் இரண்டு வழக்குகள் போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்டன.
அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் மீது இரண்டு அடிதடி வழக்குகளும், இரண்டு எரி சாராயக் கடத்தல் வழக்குகளும் நிலுவையில் இருந்து வருவதுடன், அவர் மீது போலீஸ் குற்ற சரித்திர பதிவேடும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இங்கே உறுப்பினர் குறிப்பிடும் போது, மிருகத்தனமாக நடந்து கொண்டார்கள் என்று சொன்னார்கள். காவல்துறையினருக்கும், அவர்களுக்கும் எந்தவொரு கருத்துவேறுபாடோ, எந்த வொரு பிரச்சனையோ இல்லை. ஆகவே, நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையாக இருக்கின்ற காரணத்தினால் அனுமதி கொடுக்க மறுத்திருக்கின்றார்கள். அவர்கள் ஒத்துழைப்பு நல்கி இருந்தால், இந்தப் பிரச்சனையே ஏற்பட்டு இருக்காது என்பதையும் தங்கள் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.
காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கூறியது போல் தடியடி ஏதும் போலீசாரால் நடத்தப்படவில்லை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.