search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் சோதனை- தமிழகம் முழுவதும் 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை வேட்டை
    X

    லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வரும் காமராஜின் சம்பந்தி வீடு

    முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் சோதனை- தமிழகம் முழுவதும் 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை வேட்டை

    • லஞ்ச ஒழிப்புத்துறையினர் முன்னாள் அமைச்சர் காமராஜின் வீட்டில் சோதனை நடத்துவதற்கு மன்னார்குடி பகுதி அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • அவர்கள் காமராஜ் வீடு முன்பு திரண்டு போலீசாருக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள்.

    மன்னார்குடி:

    தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 2015-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை உள்ள காலகட்டத்தில் பல அமைச்சர்கள் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து குவித்ததாக புகார்கள் எழுந்தன.

    அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் தகவல்கள் திரட்டினார்கள்.

    லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய விசாரணையில் சில அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து குவித்திருப்பதாக தெரியவந்தது. அதன்பேரில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, வீரமணி, கே.பி.அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    முன்னாள் அமைச்சர்களின் நண்பர்கள், உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. அதனடிப்படையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் 6 பேர் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

    இந்தநிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தற்போது நன்னிலம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான காமராஜ் மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பதாக புகார்கள் கூறப்பட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது முன்னாள் அமைச்சர் காமராஜ் 2015- ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை பதவியில் இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பது தெரியவந்தது. குறிப்பாக காமராஜ் ரூ.58.44 கோடி அளவுக்கு சொத்து குவித்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் கருதினார்கள்.

    முன்னாள் அமைச்சர் காமராஜ் மட்டுமின்றி அவரது மகன்கள் இனியன், இன்பன் மற்றும் திருவாரூரைச் சேர்ந்த சந்திரஹாசன், கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார் ஆகியோரும் முன்னாள் அமைச்சர் காமராஜ் பெயரை பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பதாக தெரிய வந்தது. இதையடுத்து இந்த 6 பேர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டு உள்ள பத்திரிகை செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    காமராஜ், முன்னாள் அமைச்சர், உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை தற்போது நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், திருவாரூர் மாவட்டம் என்பவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாக ஒரு விரிவான விசாரணை பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.

    மேற்கண்ட விரிவான விசாரணையின்போது, அவர் 1.4.2015 முதல் 31.3.2021 வரை உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்த காலத்தில் அவருடைய அரசு பதவியை தவறாக பயன்படுத்தி, பல்வேறு ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டு சுயலாபம் அடைந்து வருமானத்திற்கு அதிகமாக அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அவர் பெயரிலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் மற்றும் அவருடைய நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரிலும் ரூ.58 கோடியே 44 லட்சத்து 38 ஆயிரத்து 252 அளவுக்கு சொத்து சேர்ந்துள்ளதாக தெரியவந்தது.

    இந்த விரிவான விசாரணையில் கண்டறியப்பட்ட விபரங்களின் அடிப்படையில் திருவாரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற எண்.4/2022 சட்டப்பிரிவுகள் 120(பி) ஐ.பி.சி., 13(2), 13(1) (இ), 13(2), 13(1) (இ), 109 ஐ.பி.சி., 13(2), 13(1) (பி), 12, 13(2), 13(1) (பி) 2018-ன்படி காமராஜ், முன்னாள் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர், டாக்டர் எம்.கே.இனியன், டாக்டர் கே.இன்பன், ஆர்.சந்திரசேகரன், பி.கிருஷ்ண மூர்த்தி மற்றும் எஸ்.உதய குமார் ஆகியோர் மீது நேற்று (7-ந்தேதி) வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆதரவாளர்கள் மூலமாகவும் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு சந்தேகம் வந்த போது இது தொடர்பாக அவர்கள் கடந்த சில மாதங்களாக பல்வேறு தரப்பினர்களிடம் விசாரணை செய்து தகவல்களை சேகரித்து வந்தனர்.

    இந்தநிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள காமராஜின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடந்து வருகிறது. அவரது நண்பர்கள், உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் முற்றுகையிட்டுள்ளனர்.

    தமிழகம் முழுவதும் தஞ்சை, திருச்சி, கோவை, சென்னை உள்பட மொத்தம் 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். சென்னையில் மட்டும் 6 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. இது அ.தி.மு.க. தலைவர்கள், நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதற்கிடையே காமராஜ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகளும் முற்றுகையிட்டு சோதனை நடத்தி வருகிறார்கள்.

    லஞ்ச ஒழிப்புத்துறையினர் முன்னாள் அமைச்சர் காமராஜின் வீட்டில் சோதனை நடத்துவதற்கு மன்னார்குடி பகுதி அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் காமராஜ் வீடு முன்பு திரண்டு போலீசாருக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள்.

    Next Story
    ×