search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதலுக்கு மட்டுமல்ல வாழ்க்கையில் குழப்பம் ஏற்படும்போது மனதில் இருந்து முடிவு எடுங்கள்- குஷ்பு
    X

    காதலுக்கு மட்டுமல்ல வாழ்க்கையில் குழப்பம் ஏற்படும்போது மனதில் இருந்து முடிவு எடுங்கள்- குஷ்பு

    • காதல் வரும்போது மட்டும் மனதில் இருந்து யோசிக்க வேண்டும் என்பது இல்லை.
    • அனைத்து நேரத்திலும் மனதில் இருந்து யோசித்தால் வாழ்க்கையில் வெற்றி ஏற்படும்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் நடந்த சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழாவில் பா.ஜனதா தேசிய குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு கலந்து கொண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பல நேரங்களில் உங்களுக்கு முடிவெடுக்க வேண்டிய நிலை வரும் போது கொஞ்சம் குழம்பி போவீர்கள். அவ்வாறு குழப்பம் வரும்போது மனம் மற்றும் புத்தி இதில் எது சொல்வதை கேட்க வேண்டும் என தெளிவாக விவேகானந்தர் சொல்லியுள்ளார்.

    காதல் வரும்போது மனதில் இருந்து யோசிப்பீர்கள். ஏனென்றால் மனதுதான் சரியான முடிவை எடுக்கும். மனதில் இருந்து யோசி அப்போதுதான் முடிவு சரியாக இருக்கும். வீட்டில் அம்மாவிடம் கேட்டுப்பாருங்கள். நீங்கள் புத்தியில் இருந்து யோசிப்பீர்களா அல்லது மனதில் இருந்து யோசிப்பீகளா என்று. அதற்கு மனதில் இருந்துதான் யோசிப்பதாக சொல்வார்கள். அதனால் தான் சுவாமி விவேகானந்தர் சொன்னார் வாழ்க்கையில் குழப்பம் வரும்போது மனதில் இருந்து முடிவு எடுங்கள் என்று.

    காதல் வரும்போது மட்டும் மனதில் இருந்து யோசிக்க வேண்டும் என்பது இல்லை. அனைத்து நேரத்திலும் மனதில் இருந்து யோசித்தால் வாழ்க்கையில் வெற்றி ஏற்படும். புத்தியை முன்னேற்றத்துக்கு பயன்படுத்துங்கள். நாளை நீ என்ன சாதிக்க வேண்டும், என்னவாக மாற வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள். ஆண், பெண் வித்தியாசம் பார்க்காமல் இருக்கிறோம். பெண்களிடம் சில விஷயங்களை சொல்லி வளர்க்கிறோம். ஆனால், ஆண்களிடம் அதைச்சொல்லி வளர்ப்பது இல்லை. இதை எல்லாம் சுவாமி விவேகானந்தர் சொல்லிக் கொடுத்திருக்கிறார். உண்மையை பேசும்படி சுவாமி விவேகானந்தர் சொல்லியிருக்கிறார்.

    வெளியில் இருந்து இந்துத்துவத்தை தவறான சாயம் பூசுகிறார்கள். எல்லோரையும் சமமாக மதி. ஆண், பெண்ணை சமமாக பார் என்பது தான் இந்துத்துவா. பிரதமர் மோடியின் பேச்சிலும் விவேகானந்தர் தான் இருக்கிறார். உலகம் கொரோனாவால் தத்தளித்துக் கொண்டிருந்த போது நம் நாட்டுக்கு மட்டுமில்லாமல் உலகத்துக்கே தடுப்பூசி அனுப்பியிருக்கிறார்.

    கன்னியாகுமரி பாறையில் தான் 3 நாள் தியானம் இருந்தார். இந்த மண் சுவாமி விவேகானந்தரின் புனித மண். இரவு தூங்குவதற்கு முன் கண்மூடி ஒரு நிமிடம் இருந்தால் சுவாமி விவேகானந்தர் வருவார். அவர் வந்தபிறகு உங்கள் வாழ்க்கையில் நிம்மதி வரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

    சுவாமி விவேகானந்தரை பின்பற்றவில்லை என்று கூறினாலும் ஏதோ ஒரு விஷயத்தில் அவரை பின்பற்றிக் கொண்டு தான் இருக்கிறோம். விவேகானந்தர் என்ன சொல்லிக்கொடுத்தாரோ அந்த விஷயங்கள் மட்டும் தான் இப்போதும் பார்த்து பேசி கொண்டு இருக்கிறோம்.

    இந்துத்துவாவை எதிர்கட்சிகள் தவறாக புரிந்து கொண்டார்கள். தேர்தல் நேரத்தில் மட்டும் தான் எதிர்கட்சியினருக்கு பூநூல், கோவில் நினைவுக்கு வரும். அப்போது தான் தலைக்கு டர்பன் கட்டுவார்கள். சாதியை வெளிப்படுத்துவார்கள்.

    இந்துத்துவத்துக்கும், மதத்துக்கு எதிராக பேசுபவர்களுக்கு தேர்தல் நேரத்தில் மதம் நினைவுக்கு வரும். யாருமே கோவிலுக்கு போகக்கூடாது என்றவர்கள் கோவில் கோவிலாக போகிறார்கள். கையில் காப்பு கட்டுகிறார்கள். பூஜை செய்வார்கள். மதத்தை ஓட்டு வங்கியாக மாற்ற அந்த நேரத்தில் மக்களை முட்டாளாக்குகிறார்கள். மக்களின் ஓட்டு வேண்டும் என்பதற்காக மதத்தை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

    கவர்னர் விஷயத்தில் எல்லாமே தவறாகத்தான் இருக்கிறது. நீங்கள் அரசாங்கம் நடத்துகிறீர்கள் என்றால் அதற்கு மேல் கவர்னர் இருக்கிறார். அரசாங்கத்தை மேற்பார்வை செய்யவும், தவறு நடந்தால் தட்டி கேட்பவராகவும் கவர்னர் இருக்கிறார். சட்டசபையில் இருந்து கவர்னர் போகும்போது பொன்முடி அவரை சைகைகாட்டினார். அது எவ்வளவு பெரிய தவறு. இதற்கு முன்பு பெண்கள் பஸ்சில் ஓசியில் போவதாக பொன்முடி சொன்னார். அப்போது முதல்-அமைச்சர் பேசவில்லை. அப்படி எனில் கவர்னருக்கு என்ன மரியாதை கொடுக்கிறீர்கள்?

    தமிழகம், தமிழ்நாடு இரண்டுக்குமே வித்தியாசம் இல்லை என காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி சொன்னபோது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏன் கோஷம் போடவில்லை. கவர்னருக்கு எதிராக கோஷம் போடும்போது மக்கள் பார்ப்பார்கள் என்பதற்காக அப்படி செய்கிறார்கள். காங்கிரஸ் ஒரு காமெடி பீஸ், அதை யாரும் மதிக்க மாட்டார்கள் என்பதால் அதுபற்றி பேசுவது இல்லை.

    சேதுசமுத்திர திட்டம் கொண்டு வர தனி தீர்மானத்தை முதல்-அமைச்சர் கொண்டு வருகிறார். அதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கூறியதை நாங்கள் ஆதரிக்கிறோம். துணிவு படத்தில் சர்ச்சைக்குரிய வசனம் வருவதாக கூறுகிறீர்கள். ஆனால் நான் இன்னும் படம் பார்க்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×