search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சபாநாயகர் இருக்கை முற்றுகை - அ.தி.மு.க. உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம்
    X

    சபாநாயகர் இருக்கை முற்றுகை - அ.தி.மு.க. உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம்

    • எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.
    • அப்போது, சபாநாயகர் இது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என கூறினார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதிலாக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதையடுத்து சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இருக்கையின் அருகில் உள்ள துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கித் தர வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    ஆனால் சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தில், தான் விதிப்படியே செயல்பட்டு வருவதாக தொடர்ந்து கூறி வந்துள்ளார். கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரின் போதும், அ.தி.மு.க. துணைத் தலைவர் இருக்கை விவகாரம் எதிரொலித்தது.

    இந்நிலையில் 3 நாட்கள் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடர் இன்றுடன் முடிகிறது. கடைசி நாளான இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தை எழுப்பி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக தங்களிடம் இதுவரை 10 முறை கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. (எந்தெந்த நாட்களில் கடிதம் கொடுக்கப்பட்டது என்பதையும் தெரிவித்தார்).

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பு அளித்துள்ளது. இதுபோன்ற ஆவணங்களை எல்லாம் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக நீங்கள் கேட்டு இருக்கிறீர்கள். 2 நாட்களுக்கு முன்பும் கூட அது தொடர்பான நகல்களை நாங்கள் உங்களிடம் வழங்கி இருக்கிறோம்.

    இருப்பினும் எதற்காக நீங்கள் துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கி தர மறுக்கிறீர்கள் என்பது தெரியவில்லை. இதற்கான காரணம் என்ன என்பதும் எங்களுக்கு தெரியவில்லை. இது எங்களுக்கு வேதனை அளிக்கும் விஷயமாகவே உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத் தொடர்ந்து சபா நாயகர் அப்பாவு, துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்து கூறியதாவது:-

    சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருக்குதான் குறிப்பிட்ட இடத்தில் இருக்கை ஒதுக்கி தர வேண்டும் என்கிற விதி உள்ளது. துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக அது போன்ற எந்த விதியும் இல்லை. இதற்கு முன்பு இருக்கை விவகாரம் தொடர்பாக எனக்கு முன்பு இருந்த சபாநாயகர் எடுத்த முடிவைத்தான் நானும் எடுத்துள்ளேன்.

    துணைத் தலைவராக, கொறடாவாக நீங்கள் யாரை குறிப்பிடுகிறீர்களோ அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இருக்கை விவகாரத்தை பொறுத்தவரை யாரும் கேள்வி எழுப்ப வேண்டிய அவசியம் இல்லை. அது எனது அதிகாரத்துக்கு உட்பட்டது. இந்த விஷயத்தில் மரபுப்படியும், விதிப்படியும் நான் செயல்பட்டு வருகிறேன். அது போன்றே தொடர்ந்து செயல்படுவேன். விதிப்படியும், சட்டப்படியும் நான் இந்த அவையை நடத்தி வருகிறேன். ஒரு சின்னத்தில் போட்டியிட்டு அதற்கு எதிராக வாக்களித்த 11 பேர் மீது அப்போதைய சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கு நீங்கள்தான் (எடப்பாடி பழனிசாமி) உங்கள் அருகில் இடம் ஒதுக்கி கொடுத்தீர்கள். நான் கொடுக்கவில்லை.

    என்னைப் பொறுத்தவரையில் யாருடைய மனமும் கோணாத வகையில் இந்த அவையை நேர்மையுடன் நான் நடத்தி வருகிறேன்.

    இவ்வாறு சபாநாயகர் அப்பாவு பேசினார்.

    இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி எழுந்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக மீண்டும் பேசினார். ஆனால் அவரது மைக் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் அவர் பேசியது எதுவும் வெளியில் கேட்கவில்லை.

    இந்த நேரத்தில் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன், எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு எதிராக எழுந்து சத்தமாக பேசினார். அவரது பேச்சுக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

    இந்த நேரத்தில் ஓ.பன்னீர்செல்வமும் எழுந்து ஏதோ பேசினார். அதுவும் வெளியில் கேட்கவில்லை. இப்படி ஒரே நேரத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் மற்றும் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியனும் பேசிக் கொண்டே இருந்ததால் அவையில் கடுமையான கூச்சல்-குழப்பம் நிலவியது.

    இதைத் தொடர்ந்து சபா நாயகர் அப்பாவு அனைவரும் தங்களது இருக்கையில் அமருங்கள் என்று கூறிக்கொண்டே இருந்தார். ஆனால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரின் நட வடிக்கை ஒருதலைப்பட்சமாக இருக்கிறது என்று கூறி கோஷம் எழுப்பிய படியே தங்களது இருக்கைகளில் இருந்து எழுந்து சென்று சபாநாயகரின் இருக்கை முன்பு திரண்டனர். அப்போது அ.தி.மு.க. துணை கொறடா ரவி உள்பட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் சிலர் தரையில் அமர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து சபாநாயகர், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களைப் பார்த்து நீங்களே வெளியில் செல்கிறீர்களா? அல்லது வெளியேற்றவா? என்று கேள்வி எழுப்பினார். அதன் பிறகும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தரையில் அமர்ந்தபடியும், சபாநாயகர் இருக்கையை சுற்றி நின்ற படியும் கோஷம் எழுப்பிக் கொண்டே இருந்தனர்.

    இதைத் தொடர்ந்து சபைக் காவலர்கள் மூலமாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சபை காவலர்கள் சட்டசபை அரங்கினுள் வந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை குண்டு கட்டாக வெளியேற்றினர்.

    அப்போதும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பியதால் சபையில் பரபரப்பு நிலவியது.

    இதற்கிடையே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்படும் போது, உங்கள் அரசியலை சபைக்குள் செய்ய வேண்டாம். வெளியில் வைத்துக் கொள்ளுங்கள் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

    Next Story
    ×