யார் மீதும் நம்பிக்கை இல்லாததால் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பை ஒப்படைக்கவில்லை- தினகரன்

யார் மீதும் நம்பிக்கை இல்லாததால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பை ஒப்படைக்கவில்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
திண்டுக்கல்லில் டி.டி.வி. தினகரன் பேட்டியளித்த காட்சி.
திண்டுக்கல்லில் டி.டி.வி. தினகரன் பேட்டியளித்த காட்சி.
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல்லில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்கிறார். பொதுவாக முதல்வர் பொறுப்பில் இருக்கும் நபர்கள் அதிக நாட்கள் வெளிநாடு செல்லும் போது தனது பொறுப்புகளை யாரிடமாவது ஒப்படைப்பது வழக்கம். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தனது கட்சியில் யார் மீதும் நம்பிக்கை இல்லாததாலும் பயத்தாலும் தனது பொறுப்புகளை ஒப்படைக்காமல் சென்றுள்ளார்.

இதற்கு முன்பு தமிழகத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற தொழில் முனைவோர்கள் ஏன் தமிழகத்தை விட்டு வேறு மாநிலத்துக்கு சென்றார்கள்? ஏற்கனவே இங்கு தொழில் செய்தவர்களுக்கு போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் அவர்கள் வேறு மாநிலத்தை தேர்ந்தெடுத்து சென்று விட்டார்கள்.

முன்னாள் எம்.பி. மைத்ரேயன் சொன்னதைப் போல அ.தி.மு.க.வில் யாரும் உள்ளத்தால் இணைந்து இருக்க வில்லை. ஆட்சி இருப்பதால் கட்சியில் உள்ளனர். ஆட்சி இல்லாமல் போய் விட்டால் நெல்லிக்காய் மூட்டைகளைப் போல சிதறி ஓடி விடுவார்கள்.

அ.தி.மு.க.விலும் தற்போது கோஷ்டி அரசியல் உருவெடுத்துள்ளது. கூட்டுறவு சங்க தேர்தலில் அ.ம.மு.க. வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அ.தி.மு.க.வில் கோஷ்டி பூசலால் பல இடங்களில் தகராறு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் குடிமராமத்து பணிகளை ஏப்ரல் மாதமே செய்திருக்க வேண்டும். கர்நாடகத்தில் தண்ணீர் திறந்து விட்ட பிறகு குடி மராமத்து பணி செய்வதால் தண்ணீர் வீணாக கடலில் கலக்கும் நிலை ஏற்படும். தமிழகம் மட்டுமின்றி இந்தியாவிலும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நான் பெங்களூர் சென்று சசிகலாவை சந்திக்காமல் திரும்பி வந்ததாக சிலர் கூறுகின்றனர். கடந்த மாதம் சசிகலாவின் தோழி சந்திரலேகா சந்தித்து வந்ததால் எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஒரு மாதத்தில் 6 பேர் மட்டுமே அவரை சந்திக்க முடியும். எனவே வருகிற 5-ந் தேதி அவரை சந்தித்து பேசுவேன்.

காஷ்மீர் விவகாரத்தில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கு முன்பாக ஜனநாயக முறைப்படி அனைத்து கட்சி பிரதிநிதிகளை கலந்து பேசி முடிவை அறிவித்திருக்க வேண்டும். இதனால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்த்திருக்கலாம்.

அம்பேத்கர் சிலை உடைப்பு சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்பேத்கர் மட்டுமின்றி எந்த தலைவர்களின் சிலைகளையும் அவமதிப்பு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com