கைகளை சுத்தம் செய்யும் திரவம்- முக கவசத்துக்கு கடும் தட்டுப்பாடு

முக கவசம், கை கழுவும் திரவம் ஆகியவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் இரண்டுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
முக கவசம்
முக கவசம்
Published on

சென்னை:

கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

பள்ளி, கல்லூரிகள் உள்பட கல்வி நிறுவனங்களை மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதுடன் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ளும் வகையில் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் மத்தியில் முக கவசங்களை அணியும் பழக்கம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் கைகளை சுத்தப்படுத்தும் திரவத்தையும் (சானிடைசர்) மக்கள் அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

இதனால் முக கவசம், கை கழுவும் திரவம் ஆகியவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் இந்த இரண்டுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் முக கவசம், கை கழுவும் திரவம் ஆகியவற்றின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. ரூ.5-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முக கவசம் ரூ.30 ஆக உயர்ந்துள்ளது.

10 மி.லி. திரவம் ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதற்கு முன்பு 500 மி.லி. கை கழுவும் திரவமே ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. இப்படி விலையும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் தட்டுப்பாடும் அதிகமாகவே காணப்படுகிறது.

இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பொதுமக்கள் மத்தியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே முக கவசம், கை கழுவும் திரவம் ஆகியவை தாராளமாக கிடைக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

பொதுமக்களின் பயன்பாட்டை அறிந்து தமிழக அரசு தேவையான முக கவசங்கள், கை கழுவும் திரவத்தை கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com