

பெங்களூரு:
கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் 12-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அங்கு நடைபெற்றுவரும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள காங்கிரஸ் கட்சியும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற பா.ஜ.க. மற்றும் மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதாதளம் கட்சியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒருவாரம் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து கட்சியினரின் பிரசாரங்களும் சூடுபிடித்து, களைகட்டியுள்ளது.
சமீபத்தில் வெளியான கருத்து கணிப்பு முடிவுகளின்படி, காங்கிரஸ் கட்சி 91 இடங்களிலும், பா.ஜ.க. 89 இடங்கள் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிக்கு 40 இடங்களும் கிடைக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது என தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், பா.ஜ.க.வின் பிரசார பீரங்கியாக கருதப்படும் பிரதமர் நரேந்திர மோடி மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டால் காங்கிரசுக்கும் பா.ஜ.கவுக்கும் இடைவெளியை சமப்படுத்தி, அதற்கும் மேலாக சாதித்து ஆட்சியை கைப்பற்றி விடலாம் என பா.ஜ.க,வின் தேசிய தலைமை கருதியது.
இதையடுத்து, அம்மாநிலத்தின் பல மாவட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவருமான தேவேகவுடாவை சமீபத்தில் ராகுல் காந்தி தாக்கி பேசியதற்கு பிரதமர் மோடி எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
முன்னாள் பிரதமர் தேவேகவுடா ஒரு விவசாயியின் மகன். இந்த மண்ணின் மைந்தன். அவர் என்னை சந்திக்க டெல்லியில் உள்ள என் வீட்டுக்கு வரும் போதெல்லாம், நான் வாசலில் நின்று வரவேற்று, அவருடைய கார் கதவை திறந்து வீட்டினுள் அழைத்து செல்வேன். அதேபோல், வழியனுப்பியும் வைக்கிறேன். இந்த நாட்டின் மிகப்பெரிய தலைவர்களில் ஒருவரான தேவேகவுடாவை ராகுல் காந்தி இழிவாக பேசுவதை அனுமதிக்க முடியாது என மோடி குறிப்பிட்டிருந்தார்.
இதை வைத்து, கர்நாடக தேர்தலில் ஒருவேளை, போதுமான மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க பா.ஜ.க. முயற்சி செய்யலாம் என சில ஊடகங்களில் யூகமான செய்திகள் உலவி வருகின்றன.
இந்நிலையில் இந்த யூகங்களை அமித் ஷா இன்று மறுத்துள்ளார்.
அசாதுதீன் ஒவைசி தலைமையிலான அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்தெஹாதுல் முஸ்லிமீன் போன்ற கட்சிகளுடன் உறவு வைத்துள்ள ஒரு கட்சியுடன் (மதச்சார்பற்ற ஜனதா தளம்) தேர்தலுக்கு முன்பாகவோ, பிறகோ பா.ஜ.க. ஒருபோதும் கூட்டணி வைத்து கொள்ளாது.
பா.ஜ.க.வுக்காக திறக்கப்படும் தென் மாநிலங்களின் வாசலாக கர்நாடக சட்டசபை தேர்தல் அமையும். எங்களது கட்சி ஆட்சியை கைப்பற்றும். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு முதல் மந்திரியாக எடியூரப்பா நீடிப்பார். எங்கள் ஆட்சி அமைந்ததும், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இயக்கத்தை தடை செய்யுமாறு மத்திய அரசுக்கு கர்நாடக மாநில அரசு பரிந்துரை செய்யும் என பிரபல தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்துள்ள அமித் ஷா தெரிவித்துள்ளார். #KarnatakaElection2018 #AmitShah