

தற்காலத்தில் பெண்களை அதிகம் அச்சுறுத்தும் நோய்களில் முதன்மையானதாக 'மார்பகப் புற்றுநோய்' உருவெடுத்துள்ளது. மாறிவரும் வாழ்வியல் முறை, உணவுப் பழக்கம் மற்றும் விழிப்புணர்வு இல்லாமை ஆகியவற்றால் இந்நோயின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, "40 வயதைக் கடந்த பெண்கள்" இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பொதுவாக வயது அதிகரிக்கும் போது புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகரிக்கின்றன. 40 வயதை எட்டும்போது பெண்களின் உடலில் பல்வேறு ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன. எனவே, இந்த காலகட்டத்தில் இருந்தே விழிப்புடன் இருப்பது அவசியம். ஆரம்ப கட்டத்திலேயே இதனைக் கண்டறிந்தால், முழுமையாகக் குணப்படுத்துவதுடன் உயிர்பலி ஏற்படுவதையும் தவிர்க்கலாம்
மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிய பின்வரும் பரிசோதனைகள் பெரிதும் உதவுகின்றன:
* மாதத்திற்கு ஒருமுறை பெண்கள் தங்களை தாங்களே கண்ணாடி முன்னின்று பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
* மார்பகத்தில் ஏதேனும் புதிய கட்டிகள், வீக்கம், தோலின் நிறமாற்றம் அல்லது மார்பகக் காம்புகளில் இருந்து திரவம் கசிதல் போன்ற மாற்றங்கள் தென்படுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.
* ஆண்டுக்கு ஒருமுறையாவது தகுதிவாய்ந்த பொது மருத்துவர் அல்லது மகப்பேறு மருத்துவரிடம் சென்று முறையான பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
* 40 வயதைக் கடந்த பெண்கள் "ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை" கட்டாயமாக 'மேமோகிராம்' பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
* நமது கைகளுக்குத் தட்டுப்படாத மிகச்சிறிய கட்டிகளைக் கூட இந்த பரிசோதனை மூலம் மிகத் துல்லியமாகக் கண்டறிந்துவிட முடியும்.
நிலை 0 மற்றும் 1: புற்றுநோய் மார்பகத் திசுவுக்குள் மட்டுமே இருக்கும் ஆரம்ப நிலை. இந்த நிலையில் கண்டறிந்தால் 100% முற்றிலும் குணப்படுத்த முடியும்.
நிலை 2: கட்டி சற்றே பெரியதாகி அக்குள் நிணநீர் முனைகளுக்கு பரவும் நிலை. இதன் பிழைப்பு விகிதம் 98% ஆகும்.
நிலை 3: புற்றுநோய் மார்பகத்தின் பெரும்பகுதிக்கும் அருகிலுள்ள திசுக்களுக்கும் பரவியிருக்கும். இதன் பிழைப்பு விகிதம் 72% ஆகக் குறைகிறது.
நிலை 4: புற்றுநோய் நுரையீரல், கல்லீரல் அல்லது எலும்புகளுக்குப் பரவிய முற்றிய நிலை. இதன் பிழைப்பு விகிதம் 22% மட்டுமே.
40 வயதில் கண்டறியப்படும் கட்டிகள் பொதுவாக அளவில் சிறியதாகவும், ஆரம்ப நிலையிலும் இருப்பதால், சிகிச்சை எளிமையாகவும், மார்பகத்தை முழுமையாக அகற்ற வேண்டிய அவசியம் இல்லாமலும் குணப்படுத்த வாய்ப்புகள் அதிகம்.
மாதவிடாய் நின்ற 7 முதல் 10 நாட்களுக்குள் சுய பரிசோதனை செய்ய வேண்டும்.
கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு, மார்பகங்களின் வடிவம், அளவு சமமாக உள்ளதா, தோலில் சுருக்கங்கள் அல்லது காம்புகள் உள்நோக்கி இழுக்கப்பட்டு உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
இடது மார்பகத்தைப் பரிசோதிக்க இடது கையை தலைக்கு அடியில் வைக்க வேண்டும். வலது கையின் மூன்று விரல் நுனிகளால் வட்ட வடிவில் அழுத்திப் பார்த்து, அக்குள் பகுதி வரை கட்டிகள் ஏதேனும் உள்ளதா என ஆராய வேண்டும். இதேபோல் வலது மார்பகத்திற்கும் செய்ய வேண்டும்.
பின்வரும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
* மார்பகம் அல்லது அக்குள் பகுதியில் வலியற்ற கட்டிகள் தோன்றுவது.
* மார்பகத்தின் அளவு அல்லது வடிவத்தில் திடீர் மாற்றம் ஏற்படுவது.
* மார்பகத் தோல் சுருங்குவது அல்லது ஆரஞ்சுப் பழத்தோல் போல மாறுவது.
மார்பகப் புற்றுநோய் என்பது ஆரம்பத்தில் வலியைக் காட்டாது என்பதால், பலர் இதனை அலட்சியப்படுத்துகிறார்கள். ஆனால், முறையான இடைவெளியில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் மட்டுமே இதிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் கேடயம். எனவே, 40 வயதைக் கடந்த அனைத்துப் பெண்களும் தயக்கமின்றி, தங்களின் ஆரோக்கியத்திற்காகப் பரிசோதனைகளை மேற்கொண்டு, ஆரோக்கியமான சமுதாயத்தைப் படைக்க முன்வர வேண்டும்.