எம்ஜிஆர் பற்றி கீழ்த்தரமான பேச்சு.. தெலுங்கு நடிகர் மன்னிப்பு கேட்க தென்னிந்திய நடிகர் சங்கம் வலியுறுத்தல் | Rajendra Prasad

எம்ஜிஆர் அவர்களை கீழ்த்தரமான பேசியது அதிர்ச்சியையும் மனச்சங்கடத்தை ஏற்படுத்தியது.
எம்ஜிஆர் பற்றி கீழ்த்தரமான பேச்சு.. தெலுங்கு நடிகர் மன்னிப்பு கேட்க தென்னிந்திய நடிகர் சங்கம் வலியுறுத்தல் | Rajendra Prasad
Published on

தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர்களுள் ஒருவரான ராஜேந்திர பிரசாத் அண்மையில் விருது விழா ஒன்றில் கலந்துகொண்டார். அதில் மறைந்த நடிகர் காந்தா ராவ் குறித்து பெருமையாக பேசிய பிரசாத், காந்தாராவ் திரைப்படங்களில் கத்தி சண்டை போடுவதில் வல்லவர் என்றும் அவரின் திறமையை பார்த்து, எம்.ஜி.ஆர் பயந்து நடுங்குவார் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் ராஜேந்திர பிரசாத் கருத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " நண்பரும் சக நடிகருமான டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களுக்கு, தற்போது தாங்கள் மேடை ஒன்றில் மாபெரும் நடிகர் காந்தாராவ் அவர்களைப் பற்றி பேசிய பாராட்டிய காணொளி கண்டேன்.

ஒரு நடிகர் இன்னொரு நடிகரை பாராட்டுவது மகிழ்ச்சிக்குரியது. திறனை பரஸ்பரம் சிலாகிப்பது உன்னதமானது. ஆனால் தாங்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களை கீழ்த்தரமான முறையில் ஒப்பிட்டு பேசியது அதிர்ச்சியையும் மனச்சங்கடத்தை ஏற்படுத்தியது.

இது எனக்கு மட்டுமல்ல. இதை காணும் ஒவ்வொரு தமிழனுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும். தமிழருக்கு மட்டுமல்ல. உங்கள் சகாக்களே புண்பட்டு பேசி ஒலி செய்திகள் அனுப்பியுள்ளனர் .

இச்செயல் கண்டிக்கத்தக்கது. நமக்குள் அதாவது தமிழ், தெலுங்கு சினிமா துறையில் திறமையானவர்களை பரிவர்த்தனை செய்துகொள்வது ஒரு நீண்டகால மரபாகவே இருந்து வருகிறது.

நடிகர்கள் இயக்குனர்கள் இசை விற்பன்னர்கள் என எல்லாரையும் என்.டி.ஆர். ஏ.என்.ஆர். எஸ் வி ரங்காராவ். சாவித்திரி, சாராதாம்மா. வாணிஸ்ரீ என பட்டியல் நீளும் நடிகர்களை நாங்கள் எங்கள் குடும்பத்தில் ஒருவராக போற்றுகிறோம்.

எம்ஜிஆர் அவர்கள் வெறும் நடிகர் மட்டும் அல்ல தமிழகத்தை ஆண்ட தலைவரும் கூட. அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு ஆளுமை என்.டி ராமாராவ் அவர்கள் கட்சி தொடங்கியதற்கு ஒரு முக்கிய காரணமாகவும் எம்.ஜி ஆர் அவர்கள் இருந்திருக்கிறார்.

நான் விடயத்தை நீட்டிக்க முயலவில்லை. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவனாக மட்டுமல்ல. ஒரு சினிமாகாரனாக உங்களிடமிருந்து ஒரு மன்னிப்பை எதிர்பார்க்கிறேன்.

அது கட்டாயப்படுத்துதல் காரணமாக இல்லாமல் உங்கள் உள் மனதில் இருந்து அம் மன்னிப்பு வரவேண்டும். எங்கள் எதிர்பார்ப்பை நிறைவு செய்வீர் என்றே நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com