ஜன நாயகன் லீக் - நடிகர்கள் ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி வேதனை!

ஜன நாயகன் படக்காட்சிகள் இணையத்தில் வெளியானதற்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜன நாயகன் லீக் - நடிகர்கள் ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி வேதனை!
Published on

விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் ஜன நாயகன் திரைப்படத்தின் சில காட்சிகள் மற்றும் முழுப் படமும் இணையத்தில் கசிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் தொடக்கக் காட்சி மற்றும் ஒரு சண்டைக்காட்சி உட்பட சுமார் 5 நிமிட வீடியோ சமூக வலைதளங்களில் முதலில் வெளியானது. சில மணிநேரங்களிலேயே 3 மணி நேர முழுத் திரைப்படமும் சட்டவிரோதமாக இணையத்தில் பதிவேற்றப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ், இந்தக் காட்சிகளைப் பகிர்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. தொடர்ந்து நடிகர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது நடிகர்கள் ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளப் பதிவில்,

“யாரோ ஒருவர் 'ஜனநாயகன்' திரைப்படத்தை இணையத்தில் வெளியிட்டது அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. திரைப்பட சங்கங்கள் இதற்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும், மேலும் இதற்குப் பொறுப்பானவர்களை அரசாங்கம் அடையாளம் கண்டு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

இத்தகைய குற்றங்கள் எதிர்காலத்தில் தொடர அனுமதிக்கப்படக்கூடாது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் சூர்யா,

“மனம் உடையும்படியானது மற்றும் அநீதியானது. ஒரு முழு குழுவின் உழைப்பும் இப்படி வீணடிக்கப்பட்டுவிட்டது. உங்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன், தயவுசெய்து அந்தத் திரைப்படத்தை இணையத்தில் பார்க்கவோ, பகிரவோ அல்லது அதைப் பற்றி விவாதிக்கவோ வேண்டாம்.

அவர்களின் உழைப்பிற்கு மரியாதை கொடுங்கள். நான் என் நண்பர்களுடன் நிற்கிறேன், இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன், இது மன்னிக்க முடியாதது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் கார்த்தி,

“ஜனநாயகன் இணையத்தில் கசிந்தது ஒட்டுமொத்தத் திரைத்துறையையுமே காயப்படுத்தியுள்ளது. இந்தச் செயல் அநீதியானது, அறமற்றது மற்றும் கண்டிக்கத்தக்கது.

திரைப்படக் குழுவினருடன் இணைந்து நிற்குமாறும், சரியான முறையில் திரைப்படத்தைப் பார்த்து சினிமாவின் மாண்பைக் காக்குமாறும் ரசிகர்களிடம் நான் கோரிக்கை விடுக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com