தமிழ்நாடு (Tamil Nadu)

என்னை தாக்கிய மாணவர்களும் நன்றாக படித்து மேலே வர வேண்டும்: மாணவர் சின்னதுரை

Published On 2024-05-07 11:09 GMT   |   Update On 2024-05-07 16:04 GMT
  • படுகாயம் அடைந்த மாணவன் சின்னத்துரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.
  • சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் வேறு பள்ளியில் சேர்ந்து படிப்பை தொடர அரசு நடவடிக்கை எடுத்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பிளஸ்-2 படித்து வந்த சின்னதுரையை சாதிய மோதலால் சக மாணவர்கள் அரிவாளால் வெட்டினர். அதை தடுக்க வந்த அவரது தங்கை சந்திராவுக்கும் வெட்டு விழுந்தது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற நாங்குநேரி மாணவர் சின்னதுரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அப்போது மாணவர் சின்னதுரைக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் பேனாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்பளிப்பாக வழங்கினார்

அதன் பின்பு தலைமைச் செயலக வளாகத்தில் மாணவர் சின்னதுரை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "அதிக மதிப்பெண் எடுத்தற்காக முதலமைச்சர் என்னை நேரில் அழைத்து பாராட்டினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்களும் என்னை பாராட்டினார். நான் BCom படித்துவிட்டு CA படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். படிப்பதற்கான உதவிகளை செய்வதாக முதலமைச்சர் தெரிவித்தார்" என்று அவர் கூறினார்.

தன்னை சாதிய வன்கொடுமைக்கு ஆளாக்கியவர்கள் குறித்து பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "எல்லாரும் ஒற்றுமையாக இருக்கணும். என்னை தாக்கிய மாணவர்களும் நன்றாக படித்து மேலே வர வேண்டும்" என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News