தமிழ்நாடு

காவல்துறையை சுதந்திரமாக செயல்படவிட்டால் ஒரு மணி நேரத்தில் கொலையாளிகள் பிடிபடுவர்- ஆர்.பி.உதயகுமார்

Published On 2024-05-07 08:33 GMT   |   Update On 2024-05-07 08:33 GMT
  • மக்களுக்கு ஏமாற்றத்தை தான் தி.மு.க. அரசு பரிசாக கொடுத்துள்ளது.
  • 3 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் 300 ஆண்டுக்கான சுமைகளை மக்கள் மீது சுமத்தியுள்ளனர்.

மதுரை:

மதுரையில் இன்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

இன்றைக்கு 3 ஆண்டுகள் முடிந்து 4-ம் ஆண்டு தொடக்க விழாவை தி.மு.க. அரசு காண்கிறது. கடுமையான மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி ஏற்றம் என இந்த மூன்று ஆண்டுகளில் 30 ஆண்டுக்கான சுமைகளை மக்கள் அனுபவித்து வருகின்றனர்

தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. இந்த மூன்று ஆண்டுகளில் அதிகமான கடன் சுமை உள்ள மாநிலமாக தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின் கட்டணத்தை உயர்த்த மாட் டோம் என்று கூறினார்கள். ஆனால் கடுமையாக மின் கட்டத்தை உயர்த்தி விட்டனர்.

நீட் தேர்வு, கல்விக்கடன் ரத்து செய்வோம் என்று கூறினார்கள். அது கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது. கியாஸ் மானியம் 100 ரூபாய் தருவோம் என்று கூறினார்கள். அதுவும் அப்படியே இருக்கிறது. பெட்ரோல் விலையை கண்துடைப்பாக மட்டும் குறைத்து விட்டு டீசலுக்கான விலையை குறைக்கவில்லை. ஆயிரம் ரூபாய் அனைத்து குடும்பங்களுக்கு வழங்குவோம் என்று கூறினார்கள். தமிழகத்தில் 2 கோடியே 15 லட்சம் குடும்பங்கள் உள்ளது. ஆனால் ஒரு கோடி பேருக்கு கொடுத்துவிட்டு பாரபட்சம் பார்க்கிறார்கள்.

மக்களுக்கு ஏமாற்றத்தை தான் தி.மு.க. அரசு பரிசாக கொடுத்துள்ளது. இனியும் இந்த 2 ஆண்டுகளில் அரசை மக்கள் நம்ப தயாராக இல்லை. மீண்டும் தமிழகத்தில் எடப்பாடியார் ஆட்சி அமைவதற்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அம்மா அரசின் திட்டங்கள் அனைத்தையும் நிறுத்தி விட்டனர். இன்றைக்கு மக்கள் மனதில் மகிழ்ச்சி உள்ளதாக முதலமைச்சர் கூறுகிறார். மக்கள் மனதில் மகிழ்ச்சி இல்லை, வீழ்ச்சி தான் உள்ளது. அதுதான் உண்மையான கள நிலவரம். தி.மு.க. ஆட்சி எப்போதும் வருகிறதோ அப்போதெல்லாம் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படும்.

நெல்லை காங்கிரஸ் தலைவர் கொலையா? தற்கொலையா? என்ற முடிவு கூட இன்னும் வரவில்லை. இது காவல்துறை மெத்தனமா? அரசியல் குறுக்கீடா? அழுத்தமா? என்று தெளிவாக தெரியவில்லை.

புகார் கடிதம் கொடுக்கப்பட்டது என்று கூறுகிறார்கள். ஆனால் காவல்துறையில் கடிதம் கொடுக்கவில்லை என்று கூறுகிறார்கள். காவல்துறையை சுதந்திரமாக விட்டால் ஒரு மணி நேரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்து விடுவார்கள். அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன். ஆனால் இன்றைக்கு காவல்துறை செயல் இழந்து உள்ளது.

3 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் 300 ஆண்டுக்கான சுமைகளை மக்கள் மீது சுமத்தியுள்ளனர். தமிழகம் மகிழ்ச்சி இல்லை வீழ்ச்சியில் தான் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News