தமிழ்நாடு

லெமூர் கடற்கரை நுழைவு வாயில் மூடப்பட்டு எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருந்த காட்சி

குமரியில் 3-வது நாளாக கடல் சீற்றம் நீடிப்பு: சுற்றுலா தலங்களில் போலீஸ் தீவிர கண்காணிப்பு

Published On 2024-05-07 06:22 GMT   |   Update On 2024-05-07 06:36 GMT
  • ராட்சத அலைகள் 10 அடி முதல் 15 அடி வரை உயரத்திற்கு எழும்பியது. கடற்கரை ஒட்டி உள்ள தூண்டில் வளைவுகளில் ராட்சத அலைகள் வேகமாக மோதியது.
  • லெமூர் கடற்கரையின் நுழைவு வாயில் மூடப்பட்டு இருந்தது.

ராஜாக்கமங்கலம்:

குமரி மாவட்டம் முழுவதும் இன்றும் கடல் சீற்றமாக காணப்பட்டது. ஆரோக்கிய புரம் முதல் நீடோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

ராட்சத அலைகள் 10 அடி முதல் 15 அடி வரை உயரத்திற்கு எழும்பியது. கடற்கரை ஒட்டி உள்ள தூண்டில் வளைவுகளில் ராட்சத அலைகள் வேகமாக மோதியது. 3-வது நாளாக கடல் சீற்றமாக உள்ளதால் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதனால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. ராஜாக்கமங்கலம் லெமூர் கடற்கரை பகுதியில் நேற்று பயிற்சி டாக்டர்கள் தடையை மீறி கடலில் கால் நனைத்தபோது ராட்சத அலையில் சிக்கி 5 பேர் பலியானார்கள்.


இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கடற்கரை பகுதிக்கு நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. லெமூர் கடற்கரையின் நுழைவு வாயில் மூடப்பட்டு இருந்தது. நுழைவு வாயிலில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டிருந்தது.

நுழைவு வாயில் அருகே உள்ள பாதை வழியாக பொதுமக்கள் செல்லாத வகையில் சிவப்பு கலரில் கொடி கட்டப்பட்டு இருந்தது. லெமூர் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகளை போலீசார் திருப்பி அனுப்பினார்கள். கடற்கரைக்குள் யாரையும் நுழைய அனுமதிக்கவில்லை.

சொத்தவிளை கடற்கரை, முட்டம் கடற்கரை, கன்னியாகுமரி கடற்கரை பகுதிகளிலும் போலீசார் இன்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் யாரையும் நுழைய அனுமதிக்கவில்லை. கடலோர காவல் படை போலீசார் கடற்கரை பகுதிகளில் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News