தமிழ்நாடு

யானை வழித்தட வரைவு அறிக்கையை செயல்படுத்த தி.மு.க. அரசு முனைப்பு காட்டுவது ஏன்? எடப்பாடி பழனிசாமி

Published On 2024-05-10 08:16 GMT   |   Update On 2024-05-10 08:16 GMT
  • வனப்பகுதிகளில் காலம் காலமாக வாழும் மலைவாழ் மக்களின் வாழ்விடமும், வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்படக்கூடிய நிலைமை ஏற்படும்.
  • முறையான யானை வழித்தடத் திட்டத்தினை செயல்படுத்த வேண்டும்.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச் செயலாளர், எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது:-

தி.மு.க. அரசின் வனத்துறை 29.4.2024 அன்று யானை வழித்தடம் குறித்த ஒரு வரைவு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கை செயல்படுத்தப்பட்டால் தமிழகத்தில் வனப்பகுதிகளில் காலம் காலமாக வாழும் மலைவாழ் மக்களின் வாழ் விடமும், வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்படக்கூடிய நிலைமை ஏற்படும். குறிப்பாக, நீலகிரி மாவட்டம், கூடலூரில் வாழும் பல்லாயிரக்கணக்கான மலைவாழ் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

இந்த வரைவு அறிக்கை 161 பக்கங்களைக் கொண்டு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மலைவாழ் மக்கள், சாமான்ய மக்கள் இந்த அரசு வெளியிட்டுள்ள ஆங்கில வரைவு அறிக்கையைப் படித்து, அதன்மீது தங்களுடைய கருத்துகளை பதிவு செய்வதற்கான சாத்தியக் கூறு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள இந்தச் சூழ்நிலையில் வரைவு அறிக்கைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராடுவதற்கான வாய்ப்புகளும் முடக்கப்பட்டுள்ளன.

இந்த வரைவு அறிக்கையினால் தமிழகத்தின் பல்வேறு வனப்பகுதிகளில் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பெரும் அச்சத்திற்கும், பதட்டத்திற்கும் உள்ளாகி உள்ளனர்.

ஒரே வருடத்தில் யானை வழித் தடங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி, அதை செயல்படுத்த முனைப்பு காட்டும் தி.மு.க. அரசுக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த அரசு, யானை வழித்தடங்களை அறிவிக்கும் முன்பு, தமிழில் விரிவான வரைவு அறிக்கையினை வெளியிட்டு, மலைவாழ் மக்களுடைய கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை பதிவு செய்வதற்கு போதுமான கால அவகாசம் வழங்கி, முறையான யானை வழித்தடத் திட்டத்தினை செயல்படுத்த வேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News