தமிழ்நாடு

1 லிட்டருக்கு 100 மில்லி குறைவு - பெட்ரோல் விற்பனை நிலையம் மீது புகார்

Published On 2024-05-08 09:15 GMT   |   Update On 2024-05-08 09:15 GMT
  • பெட்ரோல் இன்றைய கால கட்டத்தில் அத்தியாவசிய தேவையாக உள்ளது.
  • மோட்டார் வாகனங்களின் ஆதிக்கம் காரணமாக சைக்கிள் பயன்பாடு வெகுவாக குறைந்துவிட்டது.

மதுரை:

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்கில் நேற்று முன்தினம் இரவு சிலர் தங்களது இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப வந்தனர்.

அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் பெட்ரோல் நிரப்பும் போது அதில் முறைகேடு நடப்பதாகவும், ஒரு லிட்டர் பெட்ரோலில் 100 மில்லி அளவிற்கு பெட்ரோல் போடாமலே பெட்ரோல் போடப்பட்டதாக கணக்கு காட்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனையடுத்து அந்த இளைஞர்கள் சிலர் மீண்டும் பெட்ரோல் பங்கிற்கு சென்று அங்கு குற்றச்சாட்டு வைத்தனர். இந்த நிலையில் அங்குள்ள அளவீடு மானி மூலமாக பெட்ரோலை நிரப்ப கூறி, அதன்படி நிரப்பிய போது ஒவ்வொரு லிட்டரிலும் 100 மில்லி அளவு குறைவாக எடுப்பது தெரியவந்தது.

இதனை அவர்கள் வீடியோவாக பதிவு செய்தபோதே பெட்ரோல் பங்க் ஊழியர் உடனடியாக எந்திரத்தில் மாற்றம் செய்தார். இதனையும் வீடியோ எடுத்த நபர்கள் அவரிடம் வாக்குவாதம் செய்து பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இந்த பெட்ரோல் பங்க் முறைகேடு குறித்து மதுரை தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் இளைஞர்கள் சிலர் புகார் அளித்த நிலையில் அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பான வீடியோ நேற்று முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

திரவ தங்கம் என அழைக்கப்படும் பெட்ரோல் இன்றைய கால கட்டத்தில் அத்தியாவசிய தேவையாக உள்ளது. வாகனங்களின் இயக்கத்துக்கு முக்கிய காரணியாக உள்ள பெட்ரோலை சாமானியர்கள் முதல் முதலாளிகள் வரை அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர். மோட்டார் வாகனங்களின் ஆதிக்கம் காரணமாக சைக்கிள் பயன்பாடு வெகுவாக குறைந்துவிட்டது.

சாதாரண வியாபாரிகள், மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள் என பலதரப் பினரும் வெளியே செல்ல மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக அவரவர் வசதிக்கேற்ப ரூ.50 முதல் தங்கள் வாகனங்களில் பெட்ரோல் போட்டு வருகின்றனர். ஆனால் அதிலும் தற்போது முறைகேடு புகார் எழுந்துள்ளது. சாமானியர்கள் உழைத்து அதில் ஒரு குறிப்பிட்ட தொகை பெட்ரோலுக்கே செலவழித்து வரும் நிலையில் அதன் அளவையும் குறைத்து விநியோகிக்கப்படுவது பொதுமக்களிடையே மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது.

நுகர்வோர்களுக்கு சரியான அளவில் சரியான விலையில் பொருட்கள், சேவைகள் கிடைக்க வேண்டும் என பல்வேறு சட்டங்கள் உள்ளன. ஆனால் பெட்ரோல் அளவில் குறைத்து நடக்கும் இந்த நூதன முறைகேட்டை தடுக்க வேண்டும். பெட்ரோல் பங்கில் நுகர்வோர்களுக்கு சரியான பெட்ரோல் அளவை வழங்குவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

Similar News