தமிழ்நாடு

கொடைக்கானல் செல்வதற்காக குடும்பத்தினருடன் மதுரை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த காட்சி.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்த பா.ஜ.க. பிரமுகர்

Published On 2024-04-29 06:34 GMT   |   Update On 2024-04-29 06:34 GMT
  • தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் உள்ளது.
  • தமிழக இளைஞர்கள், மாணவிகள், ஏழை கூலித்தொழிலாளர்கள், சிறுவர்கள் முதல் அனைவரும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள்.

மதுரை:

தமிழகத்தில் ஒரே கட்ட மாக கடந்த 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. இதையொட்டி தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 40 தொகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டான் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இதையடுத்து அவர் ஓய்வு எடுப்பதற்காக தனது குடும்பத்தினருடன் கொடைக்கானல் புறப்பட்டார். சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த அவருக்கு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

முதலமைச்சரின் தனிப்பட்ட பயணமாக இது இருந்ததால் அவரை வரவேற்க கட்சியினர் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்தநிலையில் விமான நிலைய வரவேற்பு பகுதியில் தனி நபராக ஒருவர் மட்டும் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் சென்ற அவனியாபுரம் உதவி போலீஸ் கமிஷனர் செல்வக்குமார், இன்ஸ்பெக்டர் மணிக்குமார் ஆகியோர் விசாரித்தனர். அவர் மதுரை அய்யர்பங்களாவை சேர்ந்த பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர்பாண்டி என்பது தெரியவந்தது. மேலும் அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மனு கொடுப்பதற்காக வந்திருப்பதாக தெரிவித்தார். போலீசார் அதற்கு அனுமதி கிடையாது என்று கூறினர். தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவரிடம் மனுவை தருமாறு போலீசார் கேட்டனர். தரமறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அவரிடம் இருந்து மனுவை போலீசார் கைப்பற்றினர். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் உள்ளது. சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களும் எளிதில் கிடைக்கிறது. இதனால் தமிழக இளைஞர்கள், மாணவிகள், ஏழை கூலித்தொழிலாளர்கள், சிறுவர்கள் முதல் அனைவரும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள். இதனால் தமிழகத்தில் சமூக விரோத செயல்கள், குற்ற செயல்கள் அதிகரித்து வருகிறது. இது மிகவும் எனக்கு வேதனை அளிக்கிறது. ஆகவே தாங்கள் தமிழக மக்களின் நலன் கருதி, துரித நடவடிக்கை எடுத்து போதை பொருட்கள் புழக்கத்தை தடுக்க வேண்டும் என்று தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பு: இத்துடன் தமிழகத்தில் எளிதில் கிடைக்கும் கஞ்சா பொட்டலம் இணைத்துள்ளேன்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

இதையடுத்து சங்கர்பாண்டியை தடுத்து நிறுத்திய போலீசார் அவரை கைது செய்து அவனியாபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி ஆட்சியின்போது அப்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தபோது, அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டியவர் மற்றும் தற்போதைய பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்திக்கு எதிராக முகநூல் பக்கத்தில் அவதூறு கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியவர் என்றும் தெரியவந்தது. இதற்கிடையே விமான நிலையம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து காரில் கொடைக்கானல் புறப்பட்டு சென்றார்.

Tags:    

Similar News