கிருஷ்ணகிரி அணையில் 3 டன் மீன்கள் செத்து மிதந்தன
- பெங்களூருவில் மழை பெய்ததால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கடும் துர்நாற்றத்துடன் நுரை பொங்கியவாறு தண்ணீர் வந்துள்ளது.
- கடந்த இரண்டு நாட்களாக கெலவரப்பள்ளி அணையில் இருந்து 560 கன அடிநீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு இந்த ஆண்டில் கடந்த மார்ச் 9-ந் தேதி முதல், மார்ச் 25-ந் தேதி வரை இரண்டு முறை நீர்வரத்து முற்றிலும் நின்றது. மூன்றாவது முறையாக கடந்த மார்ச் 31-ந் தேதி முதல் மே 6-ந் தேதி வரை, 37 நாட்கள் நீர்வரத்து முற்றிலும் நின்றது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வந்தது.
மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால், மே 7-ந் தேதி முதல் 9&ந் தேதி வரை மூன்று நாட்கள் அணைக்கு நீர்வரத்து இருந்த நிலையில் பின்னர் மழையின்றி நான்காவது முறையாக மே 10 முதல் நேற்று வரை 5 நாட்கள் நீர்வரத்து முற்றிலும் நின்றது.
இந்த நிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மழை பெய்ததால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கடும் துர்நாற்றத்துடன் நுரை பொங்கியவாறு தண்ணீர் வந்துள்ளது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக கெலவரப்பள்ளி அணையில் இருந்து 560 கன அடிநீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நீர் நேற்று காலை 1,126 கன அடியாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு வந்தடைந்தது. கடும் துர்நாற்றத்துடன் கழிவுநீர் கலந்து அணைக்கு நீர் வந்ததால், அணையின் மேல் பகுதியில் ஒரு கிலோ முதல் ஒன்றரை கிலோ எடை வரையில் வளர்ந்திருந்த மீன்கள் செத்து மிதந்தன. கெலவரப்பள்ளி அணையில் இருந்து வந்த அசுத்தமான நீரால், 3 டன் அளவிற்கு மீன்கள் இறந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனால் மீன்களை பிடித்து வரும் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அணையில் இருந்து இடது மற்றும் வலதுபுற வாய்க்காலில் 12 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் மொத்த உயரமான 52 அடியில் நேற்று 40.20 அடியாக இருந்தது.