உள்ளூர் செய்திகள்

போடியை குளிர்வித்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி

Published On 2024-04-30 05:29 GMT   |   Update On 2024-04-30 05:29 GMT
  • சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் விட்டு விட்டு பெய்த சாரல் மழை காரணமாக கடுமையான வெப்பத்தில் தவித்த மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
  • பல்வேறு பகுதிகளிலும் மாலை நேரங்களில் வெயிலின் தாக்கம் அடியோடு குறைந்து குளிர்ந்த காற்று வீசியது.

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

சுமார் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் கொளுத்திய நிலையில் பொதுமக்கள் பகல் பொழுதில் வெளியே வரவே மிகுந்த அச்சம் கொண்டனர்.

வயதான முதியவர்கள், குழந்தைகள் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

பல்வேறு இடங்களில் மலைப்பகுதிகளில் காட்டுத் தீயும் பற்றி எரிந்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கிய பின்னர் சாரல் மழையாக பெய்ய தொடங்கியது.

சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் விட்டு விட்டு பெய்த சாரல் மழை காரணமாக கடுமையான வெப்பத்தில் தவித்த மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். தொடர்ந்து இது போல் மழை பெய்து வெயிலின் தாக்கம் குறைய வேண்டும் என்று எதிர்நோக்கி உள்ளனர்.

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாலை நேரங்களில் வெயிலின் தாக்கம் அடியோடு குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. ஆனால் மழை பெய்யவில்லை. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அடுத்து வரும் நாட்களில் மழை பெய்யும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 115.15 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 105 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1754 மி.கன அடியாக உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 57.22 அடி. நீர் திறப்பு 72 கன அடி. இருப்பு 3092 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாகவும், சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 102.53 அடியாகவும் உள்ளது.

பெரியாறு 3.2, போடி 10.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News