உள்ளூர் செய்திகள்

5-வது நாளாக நீடிக்கும் கடல் சீற்றம்: கன்னியாகுமரியில் கடலில் இறங்க சுற்றுலா பயணிகளுக்கு தடை

Published On 2024-05-09 05:36 GMT   |   Update On 2024-05-09 05:36 GMT
  • இன்றும் கடல் சீற்றம் நீடித்தே வருகிறது.
  • போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கன்னியாகுமரி:

தென் இந்திய பெருங்கடல் பகுதி யில் கடல் சீற்ற மாக காணப்படுவதால் கடற்கரை பகுதிகளுக்கு யாரும் செல்லவேண்டாம் என்று என்று இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதனால் கடந்த 4-ந் தேதி குமரி மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இன்றும் கடல் சீற்றம் நீடித்தே வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் இறங்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து வருகிறது.

இந்த தடையால் கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு தினமும் ஏராளமானோர் வந்து முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் இறங்கி குளிப்பது வழக்கம். மேலும் கடற்கரையில் நின்று சூரியன் உதயம் பார்ப்பது உண்டு.

ஆனால் தற்போது அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சங்கிலிதுறை கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் யாரும் கடலுக்குள் இறங்கிடாத வகையில் அங்கு கயிறு கட்டி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

 அந்த பகுதியில் உள்ளூர் போலீசார், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் சுற்றுலா போலீசார் இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அவர்கள் கடலில் இறங்கச் செல்லும் சுற்றுலா பயணிகளை தடுத்து நிறுத்தி வெளியேற்றி வருகிறார்கள். அவ்வப்போது ஒலிபெருக்கி மூலம் கடற்கரைக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று சுற்றுலா போலீசார் எச்சரிக்கை விடுத்த வண்ணமாக உள்ளனர்.

இதற்கிடையில் கன்னியாகுமரியில் இன்று காலை கடல் நீர்மட்டம் "திடீர்" என்று தாழ்வானது. விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்து உள்ள வங்க கடல் பகுதியில் நீர்மட்டம் தாழ்வாக காணப்பட்டது. அதேவேளையில் இந்திய பெருங்கடல், அரபிக்கடல் ஆகிய 2 கடல்களும் சீற்றமாக காணப்பட்டன.

இதனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

எனவே பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக படகுத் துறை நுழைவு வாயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

கடல் சகஜ நிலைக்கு திரும்பிய பிறகு படகு போக்குவரத்து வழக்கம்போல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களிலும் கடல் சீற்றமாகவே காணப்பட்டது. இங்கும் ராட்சதஅலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசின.

இருப்பினும் குறைந்த அளவு வள்ளங்களில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். மேலும் கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை.

Tags:    

Similar News