உள்ளூர் செய்திகள்

சவுக்குசங்கர் ஜாமீன் மனு விசாரணை 10-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

Published On 2024-05-07 08:02 GMT   |   Update On 2024-05-07 10:54 GMT
  • அரசியல் சார்ந்த கருத்துகளை தெரிவித்து வந்தார்.
  • விசாரணையை வருகிற 9-ந்தேதிக்கு தள்ளி வைப்பு.

கோவை:

பிரபல அரசியல் விமர்சகரான சவுக்குசங்கர் சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் பல்வேறு அரசியல் சார்ந்த கருத்துகளை தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில் இவர் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பட்டியில் போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாக தெரிகிறது.

மேலும் மகளிர் போலீசார் குறித்தும் அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கோவை சைபர் கிரைம் போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா புகார் அளித்தார். அதன்பேரில் சவுக்குசங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து கடந்த 4-ந்தேதி தேனியில் வைத்து சவுக்கு சங்கரை கோவை போலீசார் கைது செய்து கோவை அழைத்து வந்து மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

இந்த நிலையில் அவரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் முடிவு செய்தனர்.

இது தொடர்பாக கோவை 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சைபர் கிரைம் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி சரவணபாபு முன்பு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி இந்த மனு மீதான விசாரணையை வருகிற 9-ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

இதேபோல் இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்க கோரி அவரது சார்பில் அவரது வக்கீல் கோபாலகிருஷ்ணன் கோவை 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் தனது கட்சிக்காரரின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி சரவணபாபு முன்பு வந்தது இந்த வழக்கு விசாரணையை 10-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். இதற்கிடையே போலீசார் சவுக்குசங்கரிடம் அவர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை வழங்கினர்.

Tags:    

Similar News