உள்ளூர் செய்திகள்

டிரைவர் செல்போனில் பேசியபடி ஓட்டியதால் தலைகுப்புற கவிழ்ந்த பஸ்: 20 பயணிகள் படுகாயம்

Published On 2024-05-09 09:37 GMT   |   Update On 2024-05-09 09:37 GMT
  • பேருந்தில் பயணித்த 24 ஆண்கள், 15 பெண்கள் காயமடைந்தனர்.
  • காயமடைந்த பயணிகள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கீழக்கரை:

ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கீழக்கரை நோக்கி அரசு நகர் பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்தில் 28 ஆண்கள், 18 பெண்கள் உள்பட மொத்தம் 46 பயணிகள் பயணம் செய்தனர். இந்த பேருந்தை ஆர்.எஸ்.மடை கிராமத்தை சேர்ந்த ஓட்டுநர் ஆத்திமுத்து(வயது 50) என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் திருப்புல்லாணி அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்து தாறுமாறாக ஓடியதை கண்டு பயணிகள் கூச்சலிட்டுள்ளனர்.

ஓட்டுநர் அலட்சியமாக செல்போனில் பேசியபடியே பேருந்தை ஓட்டி சென்றதாக பயணிகள் தெரிவித்தனர். ஆனால் இதை கவனத்தில் கொள்ளாத ஓட்டுநர் தொடர்ந்து அலட்சியமாக செல்போனில் பேசியபடி பேருந்தை ஓட்டி சென்றுள்ளார்.

இந்த சூழலில் திருப்புல்லாணி அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த டிராக்டருக்கு வழி கொடுப்பதற்காக பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை சாலையின் ஓரமாக இறக்கினார்.

அப்போது திடீரென பஸ் நிலைத்தடுமாறி சாலையோரம் உள்ள பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 24 ஆண்கள், 15 பெண்கள் காயமடைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தலைகுப்புற கவிழ்ந்து கிடந்த பேருந்தில் சிக்கிய பயணிகளை மீட்டனர். மேலும் மீட்புபடையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசாரும், மீட்புப்படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பஸ்சுக்குள் சிக்கியிருந்த அனைவரையும் விரைவாக உயிருடன் விரைவாக மீட்டனர். இந்த விபத்தில் காயமடைந்த பயணிகள் அனைவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் காயமடைந்த சிலரை தனது வாகனத்தில் ஏற்றி உடனடியாக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இந்த விபத்து குறித்து திருப்புலாணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.செல்போனில் பேசியபடியே டிரைவர் பேருந்தை அலட்சியமாக ஓட்டி சென்றதே விபத்துக்கு காரணம் என பயணிகள் தெரிவித்தனர். பொதுமக்களை ஏற்றி செல்லும் போக்குவரத்து

துறை ஊழியர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு பேருந்துகளை இயக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News