உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் நீட் தேர்வில் 2 விதமான கேள்வித்தாள்கள்: மாணவர்கள் குழப்பம்

Published On 2024-05-07 05:19 GMT   |   Update On 2024-05-07 05:19 GMT

தூத்துக்குடி, மே.7-

தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் நடந்த நீட் தேர்வில் லட்சக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வை எழுதினர். தூத்துக்குடி மாவட்டத்தில் 3 மையங்களில் நீட் தேர்வு நடந்தது.

இதில் தூத்துக்குடியில் உள்ள மையத்தில் மொத்தம் 760 மாணவ-மாணவிகள் எழுதினர். இதில் 2 தேர்வு மையத்தில் கியூ, ஆர், எஸ், டி. வரிசையிலான வினாத்தாள்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில், ஒரு மையத்தில் மட்டும் எம், என், ஓ, பி ஆகிய வரிசையில் கேள்வி தாள்கள் வழங்கப்பட்டன. அதில் சிலருக்கு கியூ, ஆர், எஸ், டி. வினாத்தாள்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் தேர்வு முடிந்தபிறகு தனியார் பயிற்சி மையங்கள் நீட் தேர்வுக்கான விடைகளை வெளியிட்டனர். அதில் கியூ, ஆர், எஸ், டி. வரிசையிலான வினாத்தாள்களுக்கு விடைகள் வெளியிடப்பட்டன. இதனால் மாணவ-மாணவிகள் விடைகளை சரிபார்த்தபோது அவர்களின் வினாத்தாள் வித்தியாசமாக இருப்பதை அறிந்தனர். இதனால் மாணவர்களும், அவர்களது பெற்றோரும் குழப்பம் அடைந்தனர்.

இதனை தொடர்ந்து சில மாணவர்களின் பெற்றோர் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் அங்கு உள்ள மனுக்கள் பெட்டியில் மனுவை போட்டுவிட்டு சென்றனர். அந்த மனுவில், துத்துக்குடியில் உள்ள தேர்வு மையத்தில் நடந்த நீட் தேர்வில் வேறு வரிசை கொண்ட வினாத்தாள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் குழப்பம் உள்ளது. எனவே தேசிய தேர்வு முகமை இதற்கு பொறுப்பேற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதுதொடர்பாக நீட் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் கூறுகையில், எப்போதும் ஒரே விதமான கேள்வித்தாள்கள் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தேர்வில் ஒரே மையத்தில் 2 விதமான கேள்வித்தாள்கள் கொடுக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. அதிலும் கியூ, ஆர், எஸ், டி. வரிசையிலான வினாத்தாள்களுக்கு மட்டும் தான் விடைகள் வந்துள்ளன.

எம், என், ஓ, பி. ஆகிய வரிசை கேள்வி தாள்களுக்கு விடை வரவில்லை. இந்த 2 கேள்வி தாள்களின் பக்கங்களின் எண்ணிக்கை வித்தியாசமாக இருந்தது. இதனால் எங்களுக்கு அச்சமாக உள்ளது. எனவே எம், என், ஓ, பி. வரிசையில் தேர்வு எழுதியவர்களுக்கு தனியாக கட் ஆப் மார்க் வழங்க வேண்டும் என்றனர்.

Similar News