என் மலர்tooltip icon

    செய்திகள்

    பார்சிலோனாவின் சாதனைத் தொகை ஒப்பந்தம்: ஒஸ்மான் டெம்பெல்-க்கு 145 மில்லியன் யூரோ
    X

    பார்சிலோனாவின் சாதனைத் தொகை ஒப்பந்தம்: ஒஸ்மான் டெம்பெல்-க்கு 145 மில்லியன் யூரோ

    பார்சிலோனா கால்பந்து கிளப் அணி, தங்களது அதிக சாதனைத் தொகையாக 145 மில்லியன் யூரோ கொடுத்து டார்ட்மண்ட் வீரரை ஒப்பந்தம் செய்துள்ளது.
    ஸ்பெயின் நாட்டில் உள்ள 20 முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கிடையே நடைபெறும் தொடர் லா லிகா. இதில் தலைசிறந்த அணியாக பார்சிலோனா விளங்குகிறது. 2016-17 சீசனில் 2-வது இடத்தைப் பிடித்தது.

    இந்த அணியில் மெஸ்சி, நெய்மர் மற்றும் சுவாரஸ் ஆகிய தலைசிறந்த வீரர்கள் இடம்பிடித்திருந்தனர். இதனால் பார்சிலோனா அணி வேறு வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் ஆர்வம் காட்டவில்லை.

    திடீரென பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முன்னணி கிளப்பான பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் நெய்மரை அணுகியது. அதிக அளவு சம்பளம் கொடுப்பதாக ஆசைவார்த்தை கூறியது. இதனால் நெய்மர் பார்சிலோனா அணியை விட்டு விலக விரும்பினார். ஆனால் பார்சிலோனா நெய்மரை இழக்க விரும்பவில்லை.

    எவ்வளவோ முயற்சி செய்தும் அதற்கு பலனில்லாமல் போனது. இறுதியில் 220 மில்லியன் யூரோ கொடுத்தால்தான் நெய்மரை விடுவிப்போம் என்று பார்சிலோனா கூறியது. 200 மில்லியன் யூரோவை கொடுக்க பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் முன்வந்தது. இதனால் நெய்மர் பார்சிலோனாவில் இருந்து வெளியேறினார்.

    பலம் வாய்ந்த எதிரியான ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்த வேண்டுமென்றால் நெய்மர் இழப்பை சரிகட்ட வேண்டும் என்று நினைத்தது. இதனால் பார்சிலோனா பல வீரர்களுக்கு வலை விரித்தது.

    அதில் ஜெர்மனி கால்பந்து கிளப்பான பொருசியா டார்ட்மண்ட் அணியில் விளையாடும் பிரான்ஸ் வீரர் ஒஸ்மான் டெம்பெல்-ஐ வாங்க பார்சிலோனா அந்த அணியுடன் பேசியது.

    முதலில் 105 மில்லியன் யூரோ கொடுக்க பார்சிலோனா முன்வந்தது. இதை பொருசியா டார்ட்மண்ட் ஏற்கவில்லை. இந்நிலையில் 145 மில்லியன் யூரோ கொடுக்க பார்சிலோனா முன்வந்தது. இதற்கு பொருசியா டார்ட்மண்ட் சம்மதம் தெரிவித்தது.

    இதனால் ஒஸ்மான் பார்சிலோனா அணிக்கு வருவது உறுதியானது. நேற்று பார்சிலோனா வந்த ஒஸ்மானுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. பின்னர் இன்று அதிகாரப்பூர்வமான ஒப்பந்தத்தில் ஒஸ்மான் கையெழுத்திட்டார்.

    பார்சிலோனா கிளப் தனது வரலாற்றில் முதன்முறையாக இவ்வளவு பணம் கொடுத்து ஒரு வீரரை வாங்குவது இதுதான் முதன்முறை. இதற்கு முன் 2014-ல் சுவாரஸை லிவர்பூலில் இருந்து 80 மில்லியன் யூரோ கொடுத்து வாங்கியதுதான் அதிகப்படியாக இருந்தது.



    பார்சிலோனா அணியுடன் ஒப்பந்தம் செய்தது குறித்து ஒஸ்மான் டெம்பெல் கூறுகையில் ‘‘உலகின் தலைசிறந்த அணியில் இணைவதன் மூலம் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த கிளப்பில் உலகின் தலைசிறந்த வீரர்கள் உள்ளனர். பார்சிலோனா அதிக அளவில் டிராபி மற்றும் சாம்பியன் பட்டம் வெல்லும் என்று நம்புகிறேன். பார்சிலோனா மைதானத்தில் விளையாடுவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றார்.

    பார்சிலோனா அணியில் நெய்மர் 11-வது நம்பர் ஜெர்சியுடன் விளையாடினார். இந்த 11-வது நம்பர் ஒஸ்மானுக்கு வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×