search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடைசி ஓவரில் 35 ரன்கள் தேவை: 40 ரன் அடித்து வெற்றி பெற வைத்த 54 வயது வீரர்
    X

    கடைசி ஓவரில் 35 ரன்கள் தேவை: 40 ரன் அடித்து வெற்றி பெற வைத்த 54 வயது வீரர்

    இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் கடைசி ஓவரில் 35 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 40 ரன்கள் எடுத்து வெற்றி பெற வைத்தார் 54 வயது வீரர்.
    இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டுஷைர் கிரிக்கெட் சங்கம் சார்பில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதில் ஸ்வின்ப்ரூக்- டார்செஸ்டர்-ஆன்-தேம்ஸ் அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த ஸ்வின்ப்ரூக் அணி 45 ஓவரில் 240 ரன்கள் சேர்த்தது. பின்னர் களமிறங்கிய டார்செஸ்டர்-ஆன்-தேம்ஸ் 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. அந்த அணி கடைசி ஓவருக்கு முந்தைய ஓவர் வரை 7 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்திருந்தது.

    டார்செஸ்டர்-ஆன்-தேம்ஸ் அணியின் வெற்றிக்கு கடைசி 6 பந்தில் 35 ரன்கள் தேவைப்பட்டது. அந்த நிலையில் 54 வயதான ஸ்டீவ் மெக்காம்ப் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அவர் பந்தை சந்திக்க கடைசி ஓவரை மிஹாய் குகோஸ் வீசினார்.

    மிஹாய் குகோஸ் முதல் பந்தை வீசினார். இந்த பந்தை ஸ்டீவ் மெக்காம்ப் சிக்சருக்கு தூக்கினார். மேலும் இந்த பந்து நோ-பால் என நடுவர் அறிவித்தார். நோ-பாலிற்கு பதிலாக வீசிய பந்தில் சிக்ஸ் விளாசினார் ஸ்டீவ் மெக்காம்ப். இதனால் முதல் பந்தில் 13 ரன்கள் கிடைத்தது.

    ஆகவே, 5 பந்தில் 22 ரன்கள் தேவைப்பட்டது. 2-வது பந்தில் ரன் இல்லை. 3-வது பந்தை பவுண்டரிக்கு விராட்டினார். இதனால் கடைசி 3 பந்தில் 18 ரன்கள் தேவைப்பட்டது.

    4-வது பந்தை நோ-பாலாக வீசினார். இதில் ஸ்டீவ் மெக்காம்ப் பவுண்டரி அடித்தார். நோ-பாலிற்கு பதிலாக வீசப்பட்ட பந்தை சிக்சருக்கு தூக்கினார். 3-வது பந்தில் 11 ரன்கள் கிடைத்தது.



    இதனால் கடைசி இரண்டு பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தில் சிக்ஸ் விளாசினார் ஸ்டீவ் மெக்காம்ப். இதனால் ஸ்கோர் லெவல் ஆனது. கடைசி பந்தில் 1 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அந்த பந்தையும் சிக்சருக்கு தூக்கினார் ஸ்டீவ் மெக்காம்ப். கடைசி ஓவரில் 40 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்துள்ளார் ஸ்டீவ் மெக்காம்ப்.
    Next Story
    ×