search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காலே டெஸ்ட்டில் வெற்றிப்பாதையை நோக்கி இந்தியா : இலங்கை 140/4
    X

    காலே டெஸ்ட்டில் வெற்றிப்பாதையை நோக்கி இந்தியா : இலங்கை 140/4

    காலே மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறி வருவதால், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

    காலே:

    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 600 ரன்கள் குவித்தது. இலங்கை அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பிரதீப் அதிகபட்சமாக 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    பின்னர் களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 291 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் 309 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முன்றாம் நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் சேர்த்திருந்தது.

    இந்நிலையில், நான்காம் நாளான இன்று ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி 240 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் விராட் கோலி 103 ரன்களுடனும், ரஹானே 23 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன்மூலம் இலங்கை அணி வெற்றிபெற 550 தேவை என்னும் இமாலய இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. 

    இதைத்தொடர்ந்து, இலங்கை அணி தனது இரண்டாம் இன்னிங்சை தொடங்கியது. ஆட்டத்தின் 3-வது ஓவரிலேயே இலங்கை அணியின் தொடக்க ஜோடியை முகமது ‌ஷமி பிரித்தார். உபுல்தரங்கா 10 ரன் எடுத்து இருந்த போது அவரது பந்தில் ‘போல்டு’ ஆனார். அப்போது ஸ்கோர் 22 ரன்னாக இருந்தது.

    2-வது விக்கெட்டுக்கு கருணாரத்னேயுடன், குணதிலகா ஜோடி சேர்ந்தார். உமேஷ்யாதவ் இந்த ஜோடியை எளிதில் பிரித்தார். குணதிலகா 2 ரன்னில் வெளியேறினார். இதனால் இலங்கை அணி 29 ரன்னில் 2 விக்கெட்டை இழந்து பரிதாப நிலையில் இருந்தது.

    3-வது விக்கெட்டான கருணாரத்னே- மென்டீஸ் ஜோடி விக்கெட் சரிவை தடுத்து பொறுமையுடன் ஆடியது.

    மதிய உணவு இடைவேளையின் போது இலங்கை அணி 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன் எடுத்து இருந்தது. கருணாரத்னே 44 ரன்னும், மென்டீஸ் 24 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    உணவு இடைவேளைக்கு பின்னர் தொடர்ந்து விளையாடிய இலங்கை அணியின் மெண்டிஸ் 36 ரன்னில் ஜடாஜா சுழலில் சஹாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினர். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மேத்யூஸ் 2 ரன்னில் ஜடேஜா பந்துவீச்சில் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன்மூலம் இலங்கை அணி 40 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்திருந்தது.

    இலங்கை அணியின் வெற்றிக்கு இன்னும் 416 ரன்கள் தேவைப்படும் நிலையில், விக்கெட்டை தக்க வைத்து இலக்கை எட்ட இலங்கை அணி போராட வேண்டும். தற்போதைய நிலையில், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எஞ்சிய விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி பெறும் வேட்கையில் இந்திய வீரர்கள் உள்ளனர்.

    Next Story
    ×