search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாம்பியன்ஸ் லீக்: அட்லெடிகோ மாட்ரிட்டை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது ரியல் மாட்ரிட்
    X

    சாம்பியன்ஸ் லீக்: அட்லெடிகோ மாட்ரிட்டை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது ரியல் மாட்ரிட்

    சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற அரையிறுதியின் 2-வது லெக்கில் ரியல் மாட்ரிட் 1-2 என தோல்வியடைந்தாலும் ஒட்டுமொத்தமாக 4-2 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
    ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் தொடரில் நேற்று நள்ளிரவு நடைபெற்று அரையிறுதியின் 2-வது லெக்கில் ரியல் மாட்ரிட் - அட்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதின.

    ஏற்கனவே நடைபெற்ற முதல் லெக்கில் ரியல் மாட்ரிட் 3-0 என வெற்றி பெற்றிருந்தது. இதனால் இந்த போட்டியில் 4-0 என வெற்றி பெற்றால்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலையுடன் அட்லெடிகோ மாட்ரிட் களம் இறங்கியது.

    ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் அட்லெடிகோ மாட்ரிட் அணியின் நிகஸ் முதல் கோலை பதிவு செய்தார். கார்னர் வாய்ப்பில் சக நாட்டு வீரர் கார்னரில் இருந்து தூக்கியடித்த பந்தை தலையால் முட்டி கோல் ஆக்கினார். 16-வது நிமிடத்தில் அட்லெடிகோ மாட்ரிட் அணி வீரர் கோல் அடிக்க பந்தை கடத்திக் கொண்டு வருகையில் ரியல் மாட்ரிட் வீரர் அவர் காலை தட்டிவிட்டார். இதனால் அட்லெடிகோ மாட்ரிட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை சரியான பயன்படுத்தி கிரிஸ்மான் கோல் அடித்தார்.



    16-வது நிமிடத்திலேயே அட்லெடிகோ மாட்ரிட் 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது. இன்னும் ஒரு கோல் அடித்தால் டிரா, இரண்டு கோல் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் உள்ளூர் ரசிகர்கள் ஆதரவுடன் அட்லெடிகோ மாட்ரிட் வீரர்கள் அபார ஆட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே 42-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் இஸ்கோ கோல் அடித்தார். பென்சிமா கொடுத்த பந்தை க்ரூஸ் அசுர வேகத்தில் அடித்தார். அந்த பந்தை அட்லெடிகோ மாட்ரிட் கீப்பர் அருமையாக தடுத்தார். ஆனால் பந்து அவரது கையில் இருந்து வெளியேறியது. அருகில் தயாராக இருந்த இஸ்கோ பந்தை கோல் கம்பத்திற்குள் உதைத்து தள்ளி கோலாக்கினார்.

    இதனால் முதல்பாதி நேரத்தில் 2-1 என அட்லெட்டிகோ மாட்ரிட் முன்னிலையில் இருந்தது. 2-வது பாதி நேரத்தில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் அட்லெடிகோ மாட்ரிட் வெற்றி பெற்றது. என்றாலும் முதல் லெக்கில் ரியல் மாட்ரிட் 3-0 என வெற்றி பெற்றிருந்ததால், ஒட்டுமொத்தத்தில் 4-2 என ரியல் மாட்ரிட் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    அடுத்த மாதம் 3-ந்தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் - யுவான்டஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி வேல்ஸில் உள்ள கார்டிஃப் மைதானத்தில் நடக்கிறது.
    Next Story
    ×