search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சதத்தை விட வெற்றியே முக்கியம்: புனே வீரர் திரிபாதி பேட்டி
    X

    சதத்தை விட வெற்றியே முக்கியம்: புனே வீரர் திரிபாதி பேட்டி

    சதத்தை விட வெற்றியே முக்கியம் என்று கொல்கத்தாவுக்கு எதிராக 93 ரன்கள் விளாசிய புனே வீரர் 26 வயதான ராகுல் திரிபாதி கூறியுள்ளார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    கொல்கத்தா :

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு கொல்கத்தா ஈடன்கார்டனில் அரங்கேறிய லீக் ஆட்டத்தில் புனே சூப்பர் ஜெயன்ட் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை தோற்கடித்தது. இதில் கொல்கத்தா நிர்ணயித்த 156 ரன்கள் இலக்கை புனே அணி 19.2 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. கொல்கத்தாவின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் ஈடன்கார்டனில் அவர்களின் பந்து வீச்சை வெளுத்து வாங்கிய புனே தொடக்க வீரர் ராகுல் திரிபாதி 93 ரன்கள் (52 பந்து, 9 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி மிரள வைத்தார்.

    ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட திரிபாதி மராட்டியத்தை சேர்ந்த முதல்தர கிரிக்கெட் வீரர் ஆவார். ராணுவ வீரரின் மகனான இவர் ஏலத்தில் ரூ.10 லட்சத்திற்கு மட்டுமே எடுக்கப்பட்டார். ஐ.பி.எல்.-க்கு முன்பு வரை யார் என்றே தெரியாத அவர் இப்போது குறுகிய காலத்தில் பிரபலமாகி விட்டார். நடப்பு தொடரில் 9 ஆட்டங்களில் 2 அரைசதம், 16 சிக்சர் உள்பட 352 ரன்கள் சேர்த்துள்ளார்.

    புனே அணியின் 7-வது வெற்றிக்கு பிறகு 26 வயதான ராகுல் திரிபாதி கூறியதாவது:-



    இன்றைய நாளில் பேட்டிங்கில் அனுபவித்து விளையாடினேன். ஏதாவது திட்டம் வகுத்து களம் இறங்கி இருந்தால் நிச்சயம் கைகொடுத்து இருக்காது. ஏனெனில் கொல்கத்தா பந்து வீச்சில் வலுவான அணி. எனவே பந்து எப்படி வருகிறது என்பதை மட்டும் கவனித்து அதற்கு ஏற்ப அடித்து நொறுக்கினேன். எதை பற்றியும் நினைக்காமல், எனது உள்உணர்வு உணர்த்தியபடி விளையாடினேன். அதனால் தான் என்னால் சிறப்பாக செயல்பட முடிந்தது.

    அணிக்கு வெற்றியை தேடித்தந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. வெற்றி தான் எப்போதும் முக்கியமானது. நாங்கள் வெற்றி பெறுகிறோம் என்றால், சதத்தை தவற விட்டாலும் பரவாயில்லை.

    சிக்சர்களை உற்சாகமாக அடித்தேன். பந்தும் அதற்கு ஏதுவாக வந்தது. சமீபத்தில் உள்ளூர் போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை இரண்டு முறை அடித்து இருக்கிறேன். இதே போல் தொடர்ந்து அதிரடி காட்டுவேன் என்று நம்புகிறேன்.

    ஓய்வறையில் சர்வதேச வீரர்களுடன் பழகுவது மூலம் நிறைய நம்பிக்கையை பெற முடிகிறது. இதில் கிடைக்கும் அனுபவங்கள் எனக்கு கனவு போன்று உள்ளது. டோனி, ஒரு ஜாம்பவான். அவருடன் இணைந்து ஆடியது மறக்க முடியாத தருணம். அவருடன் சேர்ந்து பேட்டிங் செய்த போது இரண்டு முறை நான் நாட்-அவுட்டாக இருந்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.

    இவ்வாறு திரிபாதி கூறினார்.



    கொல்கத்தா கேப்டன் கவுதம் கம்பீர் கூறுகையில், ‘இது 155 ரன்கள் எடுக்கக்கூடிய ஆடுகளம் அல்ல. இங்கு 180 ரன்களுக்கு மேல் நாங்கள் எடுத்திருக்க வேண்டும். நிறைய பந்துகளை ரன் எடுக்காமல் (டாட்பால்) வீணடித்து விட்டோம். பந்துகளை விரயம் செய்து, விக்கெட்டுகளையும் இழக்கும் போது அணியை முன்னெடுத்து செல்ல முடியாது. இதை சரி செய்ய வேண்டியது அவசியமாகும். முந்தைய ஆட்டத்தில் ஐதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் எங்களிடம் இருந்து வெற்றிக்கனியை பறித்தார் என்றால், இந்த ஆட்டத்தில் திரிபாதி வெற்றி வாய்ப்பை தடுத்து விட்டார்.

    எங்களுக்கு பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு இன்னும் நிறைய வாய்ப்பு உள்ளது. இப்போது வாழ்வா-சாவா என்ற நிலையில் இல்லை. ஆனால் ஆட்டத்திறனில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம்’ என்றார்.

    புனே கேப்டன் ஸ்டீவன் சுமித் கூறுகையில், ‘எங்கள் அனைவரின் வெளிப்பாடாக திரிபாதியின் ஆட்டம் அமைந்தது. துரதிர்ஷ்டவசமாக சதம் அடிக்க முடியவில்லை. உண்மையில் சதம் அடிக்க அவர் தகுதியானவர்’ என்றார்.
    Next Story
    ×