search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை டெஸ்ட்: 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 146/1
    X

    மும்பை டெஸ்ட்: 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 146/1

    மும்பை வான்கடே டெஸ்டில் இந்தியா 2-வது நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்துள்ளது.
    மும்பை:

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் அறிமுக வீரர் ஜென்னிங்ஸ் சதம் அடித்தார். அவர் 112 ரன்னில் அவுட் ஆனார். கேப்டன் குக் 46 ரன்னும், மொயின் அலி 50 ரன்னும் எடுத்தனர். இவர்களது ஆட்டத்தால் நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன் எடுத்தது.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. ஜோஸ் பட்லரின் அரை சதத்தால், இங்கிலாந்து அணி சரியாக 400 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்சில் ஆல்அவுட் ஆனது. பட்லர் 76 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி விக்கெட்டாக ஜடேஜா பந்தில் க்ளீன் போல்டானார். இந்திய அணி சார்பில் அஸ்வின் 6 விக்கெட்டும், ஜடேஜா 4 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.



    இதையடுத்து இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல், முரளி விஜய் ஆகியோர் களம் இறங்கினார்கள். முரளி விஜய் நிதானமாக விளையாட லோகேஷ் ராகுல் அதிரடியாக விளையாட முடிவு செய்தார். ஆனால், அணியின் ஸ்கோர் 39 ரன்னாக இருக்கும்போது ராகுல் 24 ரன்கள் எடுத்த நிலையில் மொயீன் அலி பந்தில் க்ளீன் போல்டானார்.



    அடுத்து முரளி விஜய் உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நங்கூரம் போன்று நிலைத்து நின்று விளையாடினார்கள். முரளி விஜய் 126 பந்துகளை சந்தித்து அரைசதம் அடித்தார். இந்தியா 52 ஓவரில் 146 ரன்கள் எடுத்திருக்கும்போது 2-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. முரளி விஜய் 70 ரன்னுடனும், புஜாரா 47 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    தற்போது வரை இந்தியா 254 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்த ஜோடி நாளை காலை உணவு இடைவேளை வரை நிலைத்து நின்று விளையாடிவி்ட்டால், இந்த டெஸ்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.
    Next Story
    ×