search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    177 ஆண்டுகளுக்கு பிறகு மயிலாடுதுறையில் காவிரி புஷ்கரம் விழா 12-ந்தேதி தொடங்குகிறது
    X

    177 ஆண்டுகளுக்கு பிறகு மயிலாடுதுறையில் காவிரி புஷ்கரம் விழா 12-ந்தேதி தொடங்குகிறது

    மயிலாடுதுறையில் காவிரி புஷ்கரம் விழா செப்டம்பர் மாதம் 12-ந் தேதி தொடங்குகிறது. 177 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோலாகல விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
    மயிலாடுதுறையில் காவிரி புஷ்கரம் விழா செப்டம்பர் மாதம் 12-ந் தேதி தொடங்குகிறது. 177 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோலாகல விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

    கங்கையில் தினமும் நீராடினால் என்ன புண்ணியம் கிடைக்குமோ, அந்த புண்ணியம் மயிலாடுதுறை துலாகட்ட காவிரி ஆற்றில் புனித நீராடினால் கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.

    காவிரி புஷ்கரம் என்பது குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு மாறும் குருப்பெயர்ச்சி காலமாகும். செப்டம்பர் 12-ந் தேதி முதல் 12 நாட்கள் காவிரி புஷ்கரம் புண்ணிய காலம் ஆகும். இதை ஆதிபுஷ்கரம் என்றும் அழைப்பார்கள்.

    இந்த புஷ்கர விழா கடந்த 12.9.1840-ம் ஆண்டு நடைபெற்றது. தற்போது 177 ஆண்டுகளுக்கு பிறகு புஷ்கர விழா நடைபெறுகிறது. நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் துலா கட்ட காவிரியில் செப்டம்பர் 12-ந் தேதி காலை 8.30 மணி முதல் 10.30 மணிக்குள் துலா லக்னத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் தலைமையில் புனித நீராடலுடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து கொடியேற்றத்துடன் வேதபாராயணம், வேள்விகள் நடைபெறுகின்றன.

    மேலும் கோபூஜை, கஜபூஜை, ருணவிமோசன மகா கணபதி ஹோமம் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. காவிரி புஷ்கர விழாவை முன்னிட்டு அகில பாரத துறவியர்கள் மாநாடு செப்டம்பர் 12-ந் தேதி மயிலாடுதுறையில் நடக்கிறது. 13-ந் தேதி தோஷம் விலக்கும் நவக்கிரக ஹோமம், 14-ந் தேதி திருமணம் கைகூடச் செய்யும் ஸ்வயம்வர காலா பார்வதி ஹோமம், 15-ந் தேதி வியாபாரம் பெருக்கும் ஸ்வர்ணாகர்ஷன, பைரவ ஹோமம், வடுக பூஜை ஆகியவை நடைபெற உள்ளன.

    16-ந் தேதி திருஷ்டி, வியாதிகள் போக்கும் மகா சுதர்சன ஹோமமும், 17-ந் தேதி புத்ரபேறு கொடுக்கும் சந்தான கோபாலகிருஷ்ண ஹோமம், புத்ரகாமேஷ்டி யாகம், சண்முக ஹோமமும் நடக்கிறது. 18-ந் தேதி கல்வி ஞானம் சேர்க்கும் ஹயக்ரீவ, தட்சிணாமூர்த்தி ஹோமும், வித்யா மகா சரஸ்வதி ஹோமமும், 19-ந் தேதி வியாதிகள் தீர்க்கும் தன்வந்திரி ஹோமமும் நடைபெறுகிறது. 20-ந் தேதி குபேர மகாலட்சுமி ஹோமமும், 21-ந் தேதி எமபயம், சத்ரு பயம் நீக்கும் மிருத்ஞ்ஜய ஹோமமும், 22-ந் தேதி நீண்டநாள்கள் ஆரோக்கியத்துடன் இருக்க ஆயுஷ்ய ஹோம மும், 23-ந் தேதி மகா ருத்ர சதசண்டி ஹோமமும் நடக் கிறது.

    செப்டம்பர் 12-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை தினமும் காலையில் சதுர்வேத பாராயணம், மகா ருத்ர ஜபம், சண்டி பாராயணம், காமியார்த்த ஹோமங்கள் நடைபெற்று, அதன் கலச தீர்த்தங்கள் தினமும் மதியம் 12 மணிக்கு காவிரி ஆற்றில் சேர்க்கப்பட்டு புஷ்கர புனித நீராடல் நடைபெறும். மாலையில் காவிரி ஆரத்தி, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, ருத்ரக்ரம அர்ச்சனை ஆகியவை நடைபெறுகின்றன.

    இதற்கான ஏற்பாடுகளை காவிரி புஷ்கரம் அறக்கட்டளை தலைவர் சுவாமி ராமானந்த மகராஜ், ஒருங்கிணைப்பாளர் சென்னை மகாலட்சுமி சுப்பிரமணியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×