குழந்தைகளை சத்தான உணவுகளை சாப்பிட வைப்பதற்கான எளிய டிப்ஸ்
குழந்தையை காய்கறிகளை சாப்பிட ஊக்குவிப்பதற்கான சிறந்த வழி, நீங்கள் சாப்பிடுவதையும், அதை ரசித்து ருசிப்பதையும் குழந்தையை பார்க்க வைப்பதாகும்.
குழந்தைகள் நிறைய காய்கறிகளை சாப்பிட ஊக்குவியுங்கள். அவர்களுக்கு நல்ல முன்மாதிரியாக இருங்கள். இந்த விஷயத்தில் விடாமுயற்சியும், பாராட்டும் உதவும்.
குழந்தைகளிடம் சாப்பாட்டை திணிக்கக் கூடாது. அவர்களுக்கு பசிக்கும்போதுதான் உணவு ஊட்ட வேண்டும்.
புடலங்காய், பீர்க்கங்காய், கத்தரிக்காய், அவரைக்காய் போன்ற காய்களை பெரும்பாலான குழந்தைகள் விரும்புவதில்லை. அவற்றை நறுக்கும்போது வித்தியாசமான முறையில் நறுக்க வேண்டும்.
குழந்தைகளுக்குப் பிடித்தமான விளையாட்டுப் பொருட்களின் வடிவில் காய்கறி இருந்தால் மிகவும் சிறப்பு.
காய்கறிகளை வைத்து வேடிக்கையான வடிவங்களை உருவாக்குவது அல்லது சிறு துண்டுகளாக நறுக்கி வித்தியாசமாக பரிமாறினால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
உங்கள் பிள்ளை ஒரு குறிப்பிட்ட பழம் அல்லது காய்கறியை விரும்பவில்லை என்று ஒருபோதும் முடிவெடுத்துவிட வேண்டாம். அடுத்த முறை நீங்கள் அதை சமைக்கும்போது, அவர்கள் அதை தின்று பார்க்க முயற்சி செய்யலாம்.
சரியான நேரத்துக்கு சாப்பாடு தர வேண்டும். சாப்பிடுவதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பு வரை எந்த நொறுக்குத்தீனியும், குளிர்பானமும் கொடுக்கக் கூடாது. அதிலும், சாக்லேட் போன்ற தீனிகள் கூடவே கூடாது.
குழந்தையை பழம், காய்கறிகளை வாங்க அழைத்துச் செல்லுங்கள். அவர்கள் உங்களுடன் பழங்களையும் காய்கறிகளையும் பார்க்கவும், முகரவும், உணரவும் அனுமதிக்கவும்.
காய்கறிகளை கழுவுவது, அவற்றை எடுத்துவைப்பது போன்ற சிறு சிறு வேலைகளை குழந்தைகளிடம் கொடுத்து ஈடுபடுத்துவது, அவர்கள் உணவை விரும்பி சாப்பிடத் தூண்டும்.
காய்கறி பொரியல், கூட்டு போன்றவற்றை பரிமாறும் போது கூடவே வடகம், அப்பளம் போன்ற எண்ணெயில் பொரித்தவற்றை வைக்கக் கூடாது.
அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தினால், குழந்தைகளும் உணவை விரும்பிச் சாப்பிடுவார்கள்.
சாப்பிட மறுக்கும் குழந்தைகளை ஒருபோதும் தண்டிக்காதீர்கள். எதையாவது சொல்லி பயம் காட்டாதீர்கள். அது குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சியை பாதிக்கும்.
வற்புறுத்தி உங்கள் குழந்தையை சாப்பிட வைக்க நினைப்பது தவறு. அது அவர்களுக்கு சாப்பாட்டின் மீதான கொஞ்ச நஞ்ச ஆசையையும் நீக்கிவிடும். பொறுமையோடு முயற்சி செய்யுங்கள்.