

புகைப்படங்களைத் தேடி, டவுன்லோட் செய்து, அப்லோட் செய்து ஏஐ படங்களை உருவாக்க நேரமெடுப்பது பலருக்கு பெரிய வேலையாக தெரியும்.
அதையும் எளிதாக கூகுள் தனது ஜெமினி ஏஐ சாட்பாட்டில் படங்களை உருவாகும் நானோ பனானா சேவையில் புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது.
அதாவது, இனி பயனர்கள் கூகுள் போட்டோஸ் கணக்கில் உள்ள புகைப்படங்களை நேரடியாகப் பயன்படுத்தி தங்களுக்கு பிடித்தது போல ஏஐ படங்களாக மாற்றலாம்.
இந்த வசதி பர்சனல் இன்டலிஜென்ஸ் எனும் புதிய தொழில்நுட்பம் மூலம் சாத்தியமாகிறது.
உங்கள் கூகுள் போட்டோ லைப்ரேரியை ஜெமினி முழுமையாக ஆராய்ந்து வைத்துக்கொள்ளும். அதில் நீங்கள் படங்களுக்கு அளித்துள்ள லேபிள்களையும் அறிந்து வைத்திருக்கும்.
உதாரணமாக, கூகுள் நேனோ பனானா அம்சத்தை தேர்வு செய்து, நானும் எனது நண்பனும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருப்பது போன்று படத்தை உருவாக்கு என கட்டளையிட்டால் போதும் உங்கள் படத்தையும், உங்கள் நண்பர் படத்தையும் கூகுள் போட்டோஸ் லைப்ரேரியில் இருந்து அதுவாக எடுத்து கச்சிதமாக நீங்கள் கேட்டதை உருவாக்கித் தரும். பயனர்களின் தனிப்பட்ட ரசனைகளுக்கு ஏற்ப இந்த அம்சம் செயல்படும்.
உங்கள் கூகுள் போட்டோஸில் உள்ள எந்தப் புகைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்பதை அறிய 'Source' பொத்தானை அழுத்தித் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் உருவாக்கப்பட்ட படத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய விரும்பினால், பயனர்கள் நீளமான கட்டளைகளை எழுத வேண்டியதில்லை. நிறத்தை மாற்று, அந்த பகுதியில் இதை சேர்த்துக் கொடு என சொன்னாலே ஜிமினி அதை மாற்றிக் கொடுக்கும்.
இருப்பினும் பயனர்களின் தனியுரிமை எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்று கூகுள் நிறுவனம் உறுதியளித்துள்ளது. இந்த வசதி தற்போது அமெரிக்காவில் கூகுள் ப்ளஸ் பயனர்களுக்கு முதற்கட்டமாக வழங்கப்படுகிறது. விரைவில் இந்த வசதி விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.