‘ஆர்சிபி எப்போதும் என் DNA-வின் ஒரு பகுதியாகவே இருக்கும்’ - விஜய் மல்லையா

அழியாத நினைவுகளுடன் எப்போதும் என் டிஎன்ஏ-வின் ஒரு பகுதியாகவே ஆர்சிபி இருக்கும் என அதன் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
‘ஆர்சிபி எப்போதும் என் DNA-வின் ஒரு பகுதியாகவே இருக்கும்’ - விஜய் மல்லையா
Published on

ஐபிஎல் தொடரில் பங்குபெறும் முக்கிய அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சுமார் ரூ.16,700 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு அணி விற்பனை செய்யப்பட்ட அதிகபட்ச தொகையாகும்.

ஆதித்யா பிர்லா குழுமம், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம், போல்ட் வென்ச்சர்ஸ் மற்றும் பிளாக்ஸ்டோன் ஆகிய நிறுவனங்கள் அடங்கிய கூட்டமைப்பு இந்த அணியை வாங்கியுள்ளது.

ஆர்சிபி அணி 2025-ல் தனது முதல் ஐபிஎல் கோப்பையை வென்றதைத் தொடர்ந்து, அதன் பிராண்ட் மதிப்பு பல மடங்கு உயர்ந்த நிலையில் இந்த விற்பனை நடந்துள்ளது. இந்நிலையில் ஆர்பிசி என்றும் தனது டிஎன்ஏவின் ஒரு பகுதியாகவே இருக்கும் என அதன் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

ஆர்சிபி அணி விற்பனை தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,

"பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் புதிய உரிமையாளர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஐபிஎல் தொடரின் மிகவும் மதிப்புமிக்க இந்த அணிக்கு எனது நல்வாழ்த்துகள்.

2008-ஆம் ஆண்டு நான் இந்த அணியை 450 கோடி ரூபாய்க்கு வாங்கியபோது, பலர் என்னை எள்ளி நகையாடினர்; எனது முதலீட்டை ஒரு வீண் கௌரவத்திற்காக செய்யப்பட்ட காரியம் என விமர்சித்தனர். ஆனால், 'ராயல் சேலஞ்ச்' பிராண்டை வலுப்படுத்துவதே எனது நோக்கமாய் இருந்தது, அதனால்தான் அந்தப் பெயரை அணிக்கு சூட்டினேன்.

இன்று எனது 450 கோடி ரூபாய் முதலீடு 16,500 கோடி ரூபாயாக வளர்ந்திருப்பதைப் பார்ப்பது மிகுந்த மனநிறைவைத் தருகிறது. ஆர்சிபி எப்போதும் என் உயிருடன் கலந்திருக்கும். குறிப்பாக, இன்று உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராகத் திகழும் இளம் விராட் கோலியை அணியில் சேர்த்தது உள்ளிட்ட பல மறக்க முடியாத நினைவுகள் இதில் அடங்கும்.

எனது தலைமையின் கீழும், அதற்குப் பிறகும் ஆர்சிபி அணியுடன் இணைந்த அனைத்து ரசிகர்களுக்கும் எனது நன்றிகள். பெங்களூரின் சிங்கம் ஆர்சிபி அணிக்குத் தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நமஸ்காரம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com