

19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 3 வெற்றி, 5 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை நாளை (சனிக்கிழமை) மீண்டும் எதிர்கொள்கிறது. இந்த போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சி.எஸ்.கே. அணி மும்பையை மீண்டும் வீழ்த்தி 4-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 23-ந்தேதி வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 103 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தது.
மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி (23ரன்), கொல்கத்தா (32ரன்), ஆகியவற்றையும் வீழ்த்தி இருந்தது. ராஜஸ்தான் (8 விக்கெட்), பஞ்சாப் (5 விக்கெட்) , பெங்களூரு (43 ரன்), ஐதராபாத் (10 ரன்), குஜராத் ( 8 விக்கெட்) ஆகியவற்றிடம் தோல்வியை தழுவியது.
சேப்பாக்கத்தில் நாளை நடைபெறுவது 5-வது போட்டியாகும். சென்னை அணி சொந்த மண்ணில் முதல் ஆட்டத்தில் தோற்றது. அடுத்த 2 போட்டியில் வெற்றி பெற்றது. 4- வது ஆட்டத்தில் குஜராத்திடம் மோசமாக ஆடி வீழ்ந்தது. மும்பை இந்தியன்சை ஏற்கெனவே தோற்கடித்து இருந்ததால் மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும். சேப்பாக்கத்தில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சி.எஸ்கே. வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்களா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. இதனால் பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்வது அவசியமாகும். பவர் பிளேயில் அதிரடியாக ஆடவேண்டும். சஞ்சு சாம்சன் ஒருவரே நிலையாக ஆடி வருகிறார். அவர் களத்தில் நின்றால் தான் ஸ்கோர் வருகிறது. சாம்சன் 2 சதத்துடன் 304 ரன்கள் குவித்துள்ளார்.
ஷிவம் துபே பேட்டிங் தொடர்ந்து கவலை அளிக்கும் வகையில் உள்ளது. அவர் அதிரடியாக ஆடுவது அணிக்கு தேவையாக இருக்கிறது.
பந்துவீச்சில் அன்சுல் கம்மோஜ் (14 விக்கெட்), நூர் அகமது (7), அகீல் உசைன் (6) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
5 முறை ஐ. பி.எல். கோப்பையை வென்ற மும்பை 2 வெற்றி, 6 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 9- வது இடத்தில் உள்ளது.
ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான அந்த அணி சென்னை சூப்பர் கிங்சுக்கு பதிலடி கொடுத்து 3- வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
அந்த அணி கொல்கத்தா ( 6 விக்கெட் ), குஜராத் ( 99 ரன்) ஆகியவற்றை வென்று இருந்தது. டெல்லி ( 6 விக்கெட்), ராஜஸ்தான் (27 ரன்), பெங்களூரு (18 ரன்), பஞ்சாப் ( 7 விக்கெட்), சென்னை (103 ரன்), ஐதராபாத் (6 விக்கெட்) ஆகியவற்றிடம் தோல்வியை தழுவியது.
கடந்த ஆட்டத்தில் ஐதராபாத்துக்கு எதிராக 243 ரன் குவித்தும் மும்பை தோற்றது பரிதாபமே. பந்துவீச்சில் மிகவும் பலவீனத்துடன் காணப்படும் அந்த அணி அதில் முன்னேற்றம் அடைய முயற்சிக்கும்.
இரு அணிகளும் நாளை மோதுவது 41-வது ஆட்டமாகும். இதுவரை நடைபெற்ற 40 போட்டியில் சென்னை 19-ல், மும்பை 21- ல் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக மோதிய 7 ஆட்டத்தில் சி.எஸ். கே. 6-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.