

5 முறை ஐ.பி.எல் கோப்பையை வென்று சாதனை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் நாளை (23-ந்தேதி) மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறுகிறது.
இரு அணிகளும் 2 வெற்றி, 4 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளன. இதனால் 3- வது வெற்றியை பெறப்போவது சென்னையா? மும்பையா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ரன் ரேட் அடிப்படையில் மும்பை 7- வது இடத்திலும், சென்னை 8-வது இடத்திலும் உள்ளன.
சி.எஸ்.கே. முதல் 3 ஆட்டங்களில் தோற்று 2 வெற்றியை பெற்றது. கடைசியாக ஆடிய போட்டியில் தோற்றது. மும்பை அணி முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றது . பின்னர் தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் தோல்வியை தழுவிய பிறகு கடந்த போட்டியில் வெற்றி பாதைக்கு திரும்பியது.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் (23 ரன்), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (32 ரன்) ஆகியவற்றை வீழ்த்தியது. ராஜஸ்தான் ராயல்ஸ் (8 விக்கெட்) பஞ்சாப் கிங்ஸ் (5 விக்கெட்), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (43 ரன்), சன்ரைசர்ஸ் ஐதராபாத் ( 10 ரன்) ஆகிய அணிகளிடம் தோற்றது.
ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் நெருங்கி வந்து தான் தோற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பையை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். மும்பையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது சவாலானது.
நட்சத்திர வீரர் டோனியின் வருகைக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். முழங்கால் காயத்தால் அவர் இந்த சீசனில் இதுவரை விளையாடவில்லை. பயிற்சியில் ஈடுபட்ட போதும் முழு உடல் தகுதியுடன் இருந்தால் மட்டுமே அவரை களம் அனுப்ப சி.எஸ்.கே. நிர்வாகம் திட்டமிட்டது.
டோனி உடல் தகுதியுடன் இருப்பதால் நாளை ஆடுவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதற்காக அவர் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். டோனி எந்த நிலையில் ஆடுவார் என்று தெரியவில்லை.
டோனி இம்பேக்ட் வீரராகவே அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சி.எஸ்.கே. அணிக்காக நிலையாக ஆடி வந்த ஆயுஷ் மாத்ரே காயத்தால் விலகியுள்ளார். இது அணிக்கு மிகப்பெரிய பாதிப்பாக இருக்கும். அவர் 6 ஆட்டத்தில் 2 அரை சதத்துடன் 201 ரன் குவித்து இருந்தார்.
கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்–டின் பேட்டிங் தொடர்ந்து கவலை அளிக்கும் வகையில் உள்ளது. மிகவும் முக்கியமான இந்த ஆட்டத்தில் அவர் அதிரடியாக விளையாடுவது அணிக்கு அவசியமானது.
இதே போல சஞ்சு சாம்சன், பிரேவிஸ், ஷிவம் துபே ஆகியோரும் அதிரடியாக ஆடி ரன்களை எடுக்க வேண்டும். பந்துவீச்சிலும் முன்னேற்றம் தேவை. காயத்தால் இதுவரை ஆடாத ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சன் உடல் தகுதி பெற்றதால் அணியோடு இணைந்து உள்ளார்.
ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ( 6 விக்கெட்) , குஜராத் டைட்டன்ஸ் (99 ரன்), ஆகியவற்றை வீழ்த்தியது. டெல்லி கேப்பிடல்ஸ் (6 விக்கெட்), ராஜஸ்தான் ராயல்ஸ் ( 27 ரன் ), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (18 ரன்) பஞ்சாப் கிங்ஸ் ( 7 விக்கெட்) ஆகிய அணிகளிடம் தோற்றது.
குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் மிகவும் சிறப்பாக செயல்பட்டது. இதனால் சி.எஸ்.கே. வுக்கு எதிராக மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்து 3- வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் மும்பை இந்தியன்ஸ் இருக்கிறது. இந்த சீசனில் அந்த அணி சொந்த மண்ணில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றது. 2 ஆட்டத்தில் தோற்றது.
குஜராத்துக்கு எதிராக திலக் வர்மா அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அவர் சி.எஸ். கே. பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார்.
இது தவிர குயின்டன் டி காக், ரூதர்போர்டு, நமன்தீர், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, பும்ரா, சான்ட்னெர், கசன்பர் போன்ற சிறந்த வீரர்களும் இருக்கிறார்கள். சூர்ய குமார் யாதவ் இதுவரை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.