

சென்னை:
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
இன்று காலை அவர் குமரி மாவட்டம் தக்கலை மெயின் ரோட்டில் பிரசாரத்தில் ஈடுபட்டார். இன்று மாலை 4 மணிக்கு திருநெல்வேலியிலும், மாலை 5.30 மணிக்கு மதுரை மாவட்டம் திருமங்கலத்திலும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இந்தநிலையில் மு.க.ஸ்டாலின் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 12 தொகுதிகளில் நாளை பிரசாரம் செய்கிறார். காலையில் உத்திரமேரூரில் பிரசாரத்தை தொடங்கி மாலையில் திருநின்றவூரில் முடிக்கிறார். நாளை காலை 8.30 மணிக்கு உத்திரமேரூரில் அவர் பிரசாரத்தை தொடங்குகிறார். செய்யூர், மதுராந்தகம், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து உத்திரமேரூரில் அவர் பிரசாரம் செய்கிறார்.
பின்னர் மாலை 4 மணிக்கு அம்பத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர், மதுரவாயல் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து அம்பத்தூரில் பிரசாரம் செய்கிறார்.
மாலை 5 மணிக்கு திருவள்ளூர், திருத்தணி, ஆவடி, பூந்தமல்லி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திருநின்றவூரில் பிரசாரம் செய்கிறார்.