

சென்னை:
அ.தி.மு.க.வுடன் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி அமைத்து இருக்கிறது. நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு சென்னை எழும்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
அந்த தொகுதியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் பெ.ஜான்பாண்டியன் போட்டியிடுகிறார். அதற்கான வேட்பு மனுதாக்கல் செய்து முடித்த அவர், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் சென்னை எழும்பூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று வாக்கு சேகரித்தார். நேற்று மாலை எழும்பூர் தொகுதி 77-வது வார்டு பகுதி முழுவதிலும் பிரசாரம் செய்தார்.
எழும்பூர் தொகுதி கே.பி.பார்க் பகுதியில் உள்ள ஸ்ரீபவானி அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு பிரசாரத்தை தொடங்கிய அவர், குருசாமி நகர் 8, 9, 10 தெருக்கள், குமாரசாமி ராஜாபுரம் 1, 2, 3 தெருக்கள், டீ மேலஸ் ரோடு, கோவிந்தராஜ் தெரு, முனுசாமி தெரு, ருத்ரப்பா தெரு, அய்யாவு, குழந்தை தெரு, காட்டூர் நல்ல முத்து தெரு, அங்காளம்மன், பயல பச்சையப்பன் தெரு, சந்தியப்பன் தெரு, ஜங்கன் மாய பக்தன் தெரு, விளையாட்டு மைதானம் தெரு, கோவிந்தன் தெரு, சேட் ஜஸ்வந்தம்மாள் தெரு, சேட் மோகன்லால் தெரு, பின்னர் பழைய ஆட்டு தொட்டி தெருவில் நிறைவு செய்தார்.
ஒவ்வொரு தெருவிலும் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரம் மேற்கொண்டார். அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், பூக்களை தூவியும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். பொதுமக்களிடம் ஏழைகள், எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து தன்னை அமோக வெற்றி பெற செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
பிரசாரத்தின் போது, பொதுமக்கள் மத்தியில் வாக்குகள் கேட்டு ஜான்பாண்டியன் பேசுகையில், “ஜெயலலிதா இருந்த காலத்தில் பல நன்மைகளை இந்த பகுதிகளுக்கு செய்து இருக்கிறார். 2001-ம் ஆண்டில் நான் இந்த பகுதியில் வேட்பாளராக போட்டியிட்ட போது, அத்தனை நல்ல உள்ளங்களும் எனக்காக வாக்களித்தீர்கள். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக, தி.மு.க.வின் சதியில் நான் தோல்வியுற்றதாக அறிவித்தார்கள். மீண்டும் உங்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகவே எனக்கு வாய்ப்பு அளித்திருக்கிறார்கள். உங்களுடைய வெற்றி, என்னுடைய வெற்றி” என்றார்.
அதனைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், “2001-ல் இருந்த மக்கள் செல்வாக்கை விட தற்போது 5 மடங்குக்கு மேல் அதிகமாகவே மக்கள் செல்வாக்கு இருக்கிறது. வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. வெற்றி பெற்று வந்ததும், இந்த தொகுதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்திலும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றித் தருவேன்” என்றார்.