

நடப்பு ஐ.பி.எல். தொடரில் இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி தங்களது அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்து வருகின்றனர்.
அபிஷேக் சர்மா, சகீப் உசேன் (ஐதராபாத்), உர்வில் படேல், அன்சுல் கம்போஜ் (சென்னை சூப்பர் கிங்ஸ்), ரசிக் சலாம் (பெங்களூரு) ஆகியோர் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் துணிச்சலான இளம் வீரர்கள் உர்வில் படேல், அன்சுல் கம்போஜ் என முன்னாள் வீரர் புஜாரா புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக ஜியோ ஸ்டாரில் அவர் கூறியதாவது:
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் உர்வில் படேல் விளையாடிய விதம் தற்போதைய இளம் தலைமுறை வீரர்களால் தங்களுக்கு சாதகமான நாளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதைக் காட்டுகிறது.
கடந்த சில வாரங்களாக சி.எஸ்.கே. அணி மீண்டெழுந்து வருவதற்கு அன்சுல் கம்போஜும் ஒரு முக்கியக் காரணமாக இருந்துள்ளார். மேலும் 4-வது வரிசையில் கார்த்திக் சர்மாவின் ஆட்டமும் முதிர்ச்சியடைந்துள்ளது.
பிரசாந்த் வீர் அடித்த அந்த 2 சிக்சர்கள் முக்கியமானது. இந்த இளம் படை எவ்வளவு நம்பிக்கையுடன் விளையாடுகிறது என்பதைப் பிரதிபலிக்கின்றன.
சி.எஸ்.கே. அணிக்கு இக்கட்டான தருணங்களில் சிறப்பாக செயல்படக்கூடிய துணிச்சலான இளம் வீரர்களாக அவர்கள் இருக்கிறார்கள் என தெரிவித்தார்.