

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏப்ரல் 5-ந்தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின்போது, டிஜே தேர்ந்தெடுத்த பாடல் மற்றும் கருத்துகள் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிசிசிஐ-யிடம் புகார் அளித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புகாரில் கூறியிருப்பதாவது:- தென்னிந்தியப் பழக்கவழக்கங்கள் குறித்த மீம்ஸ்களுக்குப் பிரபலமான பின்னணி இசையாக விளங்கும் ‘தோசை, இட்லி, சாம்பார், சட்னி, சட்னி’ என்ற பாடலை தங்களது இன்னிங்சுக்கு முன்பு ஒலிபரப்பியது நாகரிகமற்ற செயல். போட்டியின் போது சில சிஎஸ்கே வீரர்களுக்கு எதிராகவும் கருத்துகள் கூறப்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு, இது குறித்து விசாரிக்குமாறு பிசிசிஐ-க்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே, "சிஎஸ்கே-விடமிருந்து எங்களுக்கு ஒரு புகார் வந்துள்ளது, நாங்கள் அது குறித்து விசாரித்து வருகிறோம்," என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 5-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று 19-வது ஐ.பி.எல். கிரிட்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் பெங்களூரு அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.