

மகளிர் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்த போட்டித் தொடரில் இன்றுடன் லீக் சுற்றுகள் முடிவடைகிறது.
குரூப் 1 பிரிவில் இரண்டு லீக் ஆட்டங்கள் லண்டன் லார்ட்சில் நடக்கின்றன. இதில் தென் ஆப்பிரிக்கா-வங்கதேசம், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
ஆஸ்திரேலிய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் மிரட்டுகிறது. அந்த அணி தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், நெதர்லாந்து, பாகிஸ்தான் அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி தனது பிரிவில் முதலிடத்தில் இருப்பதுடன், ரன் ரேட்டிலும் வலுவாக இருப்பதால் ஏறக்குறைய அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தான், நெதர்லாந்தை வீழ்த்தியது. தென் ஆப்பிரிக்காவிடம் பணிந்தது. கடந்த ஆட்டத்தில் வங்கதேசத்தை தோற்கடித்தது.
6 புள்ளிகளுடன் தனது பிரிவில் 2-வது இடம் வகிக்கும் இந்திய அணிக்கு இது வாழ்வா-சாவா மோதலாகும். இதில் வெற்றி பெற்றால் இந்திய அணி சிக்கலின்றி அரையிறுதிக்கு முன்னேறலாம். மாறாக தோற்றால் 6 புள்ளியுடன் இருக்கும் தென் ஆப்பிரிக்க அணி, வங்கதேசத்திடம் தோல்வி அடைந்தால் தான் இந்தியாவால் அரையிறுதியை எட்ட முடியும்.
பலம்வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தவேண்டும் என்றால் இந்திய அணி தனது மிடில் ஆர்டர் பேட்டிங் பிரச்சனை மற்றும் பீல்டிங் சொதப்பலை சரிசெய்வதுடன் எல்லா வகையிலும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும்.