2026 வார ராசிபலன்- சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்

முதலீட்டில் தொழில் சிறப்பாக நடந்தாலும் பெரிய லாபம் கையில் நிற்காது.
2026 வார ராசிபலன்- சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்
Published on

சிம்மம்

சுமாரான வாரம். ராசிக்கு ஏழில் ராகு பகவான் நிற்பதால் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த அண்ணன், தம்பிகள் பிரிந்து தனிக் குடித்தனம் செல்லலாம். கூட்டுத் தொழில் செய்து வந்த குடும்பங்களில் சில பங்காளிகள் தொழிலை விட்டு விலகலாம். நட்பு வட்டாரங்கள் விலகிச் செல்வது போன்ற மன உணர்வு வாட்டும். அரசியலால் வீண் செலவு, மன வருத்தம் ஏற்படும். கோட்சார குரு விரய ஸ்தானத்தை நெருங்குவதால் சிலருக்கு அதிக முதலீட்டில் தொழில் சிறப்பாக நடந்தாலும் பெரிய லாபம் கையில் நிற்காது.

சிலருக்கு கண் திருஷ்டி, உடல் அலர்ஜி, செரிமானக் கோளாறு, காய்ச்சல், தலைவலி போன்ற சிறு சிறு உடல் உபாதைகள் தோன்றி மருத்துவ செலவு அதிகரிக்கும். அஷ்டமச் சனியின் காலம் என்பதால் மனதை ஒரு நிலைப்படுத்தி செயல்பட வேண்டும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு கர்மம் செய்ய புத்திரன் கிடைப்பான். சிலருக்கு தத்து புத்திர யோகம் உண்டாகும். சிலருக்கு செயற்கை கருத்தரிப்பு மூலம் கரு உருவாகும். அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் பொருட்களை வாங்கு வதில் ஆர்வம் அதிகரிக்கும். சிவனடியார்களுக்கு இயன்ற அளவு உணவு தானம் வழங்கவும்.

கன்னி

நன்மைக்கு மேல் நன்மை நடக்கும் வாரம். 2,9-ம் அதிபதி சுக்கிரன் ஆட்சி பலம் பெறுவதால் புத்திக் கூர்மை பளிச்சிடும். உடலும் மனமும் பொலிவு பெறும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகப் போகிறது. பேச்சை மூலதனமாக கொண்டவர்களின் வாழ்வாதாரம் பல மடங்கு உயரும். பொருளாதார நிலையிலே மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். லாப ஸ்தானத்தை நோக்கி குரு பகவான் நெருங்குவதால் லாபத்தையும், அதிர்ஷ்டத்தையும் வாரி வழங்குவார்.

உங்கள் உடல் நிலையில் மன நிலையில் மாற்றம் எற்படும். நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக இருந்த நிலைமாறும். தடைபட்ட அனைத்து சுப பலன்களும் தேடிவரும். வழக்குகள் தள்ளுபடியாகும். பருவ வயதினருக்கு திருமணயோகம் உள்ளது. உடன் பணிபுரிந்தவர்களுடன் உண்டான கருத்து வேறுபாடு அகன்று நட்பு நிலை நீடிக்கும். ஆயுள் பயம் அகன்று ஆரோக்கியம் அதிகரிக்கும். படுக்கையில் இருப்பவர்களுக்கு கூட நோய் தாக்கம் குறையும். முன்னோர்களின் நல்லாசிகளை பெறுவதால் மன நிம்மதி கூடும்.

துலாம்

விபரீத ராஜயோகமான வாரம். ராசி அதிபதி சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுகிறார். தடைபட்ட மகிழ்ச்சியும் சந்தோஷமும், நம்பிக்கையும் துளிர்விடும். எதிர்காலம் பற்றிய பயம் விலகும். பூர்வீகச் சொத்தில் இருந்த வில்லங்கங்கள் அகலும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுடன் நிலவிய மனக்கசப்பு மறைந்து ஒத்துழைப்பு, ஆதரவு உண்டாகும். இடம் வாங்கி வீடு கட்டுவீர்கள். வழக்குகளில் வெற்றி ஏற்படும். சிலருக்கு விபரீத ராஜயோகமாக அதிர்ஷ்ட சொத்து, பணம் பொருள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சிலருக்கு இன்சூரன்ஸ், பாலிசி முதிர்வு தொகை, உயில் சொத்து கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உள்ளது. நீண்ட நாட்களாக படுக்கையில் கிடந்தவர்கள் எழுந்து நடமாடுவார்கள். இழுத்து மூடிவிட்டுச் செல்லும் நிலையில் இருந்த தொழில் கூட விறுவிறுப்பு அடையும். திருமண முயற்சிகள் நிறைவேறும். ராசிக்கு குருப்பார்வை இருப்பதால் எந்த தடையும் இன்றி பெரியோர்களின் நல்லாசியுடன் திருமணம் நடைபெறும். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கண் சிகிச்சை பெறுபவர்களின் மருத்துவ செலவிற்கு உதவவும்.

விருச்சிகம்

எதிர்மறை சிந்தனைகள் விலகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறுகிறது. திருமணம், குழந்தை பாக்கியம், வீடு வாகன யோகம், தொழில் முன்னேற்றம், புதிய வேலை வாய்ப்பு போன்ற எல்லாவிதமான நன்மைகளும் உண்டாகும். பண வரவில் இருந்த தடை தாமதம் விலகும். சம்பள பாக்கி வசூலாகும். சேவை மனப்பான்மை மிகும். வம்பு, வழக்கு அவமானங்கள், ஆரோக்கிய குறைபாடு விலகி எல்லாவற்றிலும் சாதகமான சூழ்நிலை நிலவும்.

தாய் வழிச் சொத்தின் மூலம் சகோதரர்களிடம் ஏற்படும் கருத்து வேறுபாட்டை தவிர்க்க முறையான பத்திரப் பதிவை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். ரியல் எஸ்டேட், ஒப்பந்த தொழில் புரிபவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு எதிர்பார்த்த பலன் உண்டு. பிள்ளைகள் கல்விக்காக இடம் பெயர நேரலாம். குலத்தொழில் செய்பவர்களின் புகழ், அந்தஸ்து, கவுரவம், பணபலம் உயரும். சிலருக்கு அடமானத்தில் உள்ள சொத்து மீண்டு வரும். பச்சிளம் குழந்தைகளுக்கு பசும்பால் தானம் வழங்கவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com