

சிம்மம்
முயற்சிகளும், திட்டங்களும் நிறைவேறும். மாற்றங்களால் ஏற்றம் பெறும் வாரம். ராசிக்கு செவ்வாய் மற்றும் புதன் பார்வை உள்ளது. அமைதியான சிந்தனைகளுடன் வாழ்க்கையை நடத்துவீர்கள். தோற்றம் பொலிவு பெறும். ஆன்ம பலம் பெருகும். சாதிக்கும் எண்ணம் மேலோங்கும். எடுக்கும் முயற்சிகளில் படிப்படியான முன்னேற்றமும் முடிவில் வெற்றியும் உண்டாகும். உங்களை உதாசீனம் செய்தவர்கள் நயந்து பேசுவார்கள். உங்களின் முக்கியத்துவம் மற்றும் அவசியம் பற்றி உணருவார்கள்.
வேலை இன்மையால் பிறரின் வெறுப்பிற்கு ஆளாகியவர்களுக்கு கவுரவமான வேலை கிடைக்கும். தலைமைப் பதவி தேடி வரும். வேலை பார்த்த இடத்தில் ஏற்பட்ட வீண் பழிகள் அகலும். பிள்ளைப்பேற்றில் நிலவிய குறைகள் அகன்று குலம் தழைக்க அடுத்த வாரிசு உருவாகும். சிலரது வாரிசுகளுக்கு திருமணம் நடக்கும். அஷ்டமச் சனியின் காலத்தில் திருமணம் நடத்துவதை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கிய குறைபாடுகள் சீராகும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சிவனை வழிபட்டால் வாழ்க்கை சீராகும்.
கன்னி
தனித்திறமை மிளிரும் வாரம். ராசி அதிபதி புதன் அஷ்டமாதிபதி செவ்வாய் மற்றும் ராகுவுடன் இணைந்து ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். மனதில் தைரியம், தன்னம்பிக்கை கூடும். தள்ளிப்போன பத்திரப் பதிவு, இனிதே நடக்கும். மூத்த சகோதரர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு சுமூகமாகும். தந்தையால் சந்தோஷம் கிடைக்கும். அரசு உத்தியோகத்திற்கு சாதகமான பதில் கிடைக்கும். உங்கள் இனத்தவர் மத்தியில் பெரிய மனிதராக இருப்பீர்கள். புத்தி கூர்மையை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பீர்கள்.
தம்பதிகளிடம் நிலவிய ஈகோ தணியும். பிரிந்த தம்பதிகள் கூடி வாழும் சந்தர்ப்பம் உருவாகும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். மறு திருமண முயற்சி வெற்றி தரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 21.3.2026 அன்று நள்ளிரவு 2.28 முதல் 23.3.2026 அன்று அதிகாலை 4.14 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் கவலைகளை விடுத்து உங்கள் கடமைகளை சரியாகச் செய்யுங்கள். அனைத்தும் வெற்றி பெறும் நல்ல காலமாக இந்த வாரம் அமையும். சிவபுராணம் படிக்க காரிய வெற்றி உண்டாகும்.
துலாம்
எண்ணங்களும் லட்சியங்களும் நிறைவேறும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் தன் வீட்டை தானே பார்க்கிறார். அத்துடன் குரு பார்வையும் ராசிக்கு உள்ளதால் உழைக்காத அதிர்ஷ்ட வருமானம் உண்டு. தொட்டது துலங்கும். வாழ்வின் முன்னேற்றம், தொழில் தொடர்பான சிந்தனை, சுய முயற்சி எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். புத்திசாலித்தனமாக பேசுவீர்கள். ஞாபக சக்தி கூடும். தொழிலுக்கு அரசாங்கத்தின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
சிலருக்கு புதிய தொழில் கிளைகள் துவங்கும் வாய்ப்புகள் உள்ளது. எதிர்பார்த்த பதவி உயர்வால் உள்ளம் மகிழும். குல தெய்வ கோவிலுக்கு சென்று பிரார்த்தனைகளை நிறைவு செய்யும் வாய்ப்பு உள்ளது. கணவன்-மனைவி, ஒற்றுமை அதிகரிக்கும். 23.3.2026 அன்று அதிகாலை 4.14 முதல் 25.3.2026 அன்று காலை 6.17 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். பெரிய பணப் பரிவர்த்தனைகளை தவிர்க்கவும். விநாகயரை அருகம்புல் சாற்றி வழிபடவும்.
விருச்சிகம்
அதிர்ஷ்டமான வாரம். ராசி அதிபதி செவ்வாய் அஷ்டமாதிபதி புதன் மற்றும் ராகுவுடன் சுக ஸ்தானத்தில் உள்ளார். அதிர்ஷ்டம் சார்ந்த செயல்களில் ஆர்வம் கூடும். சிலருக்கு குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் எண்ணம் அதிகரிக்கும். தொழில் வியாபரம் தொடர்பான சிறு அலைச்சல் இருந்தாலும் அதன் மூலம் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். சுய ஜாதக தசா புக்தி சாதகம் அறிந்து சுய தொழில் துவங்க வேண்டும். மேலதிகாரிகள், சக ஊழியர்கள் உங்களுக்கு அனுசரனையாக நடந்து கொள்வார்கள்.
இன்னும் சரியாக இரண்டு மாத காலத்திற்கு ராசிக்கு குருப் பார்வை இருப்பதால் அவசியமான முக்கியமான பணிகளை விரைந்து முடிப்பது நல்லது. பிள்ளைகளுக்கு அரசு உத்தியோகம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும். 25.3.2026 அன்று காலை 6.17 முதல் 27.3.2026 அன்று காலை 9.36 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அவசியமற்ற பெரிய பணப் பரிவர்த்தனைகளைத் தவிர்க்கவும். நிலைமையைப் புரிந்து கொண்டு அதற்கேற்றபடி செயல்பட்டால் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். சிவ வழிபாட்டால் நன்மைகள் கூடும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406