2026 வார ராசிபலன்- தனுசு, மகரம், கும்பம், மீனம்

இல்லத்தில் பிள்ளைகளின் சுப விசேஷத்திற்கான பேச்சு வார்த்தைகள் நடக்கும்.
2026 வார ராசிபலன்- தனுசு, மகரம், கும்பம், மீனம்
Published on

தனுசு

அமைதியான வாரம். ராசிக்கு ராசி அதிபதி குருவின் பார்வை சில வாரங்களுக்கு மட்டுமே கிடைக்கப் போகிறது அதன் பிறகு அஷ்டம ஸ்தானத்தில் ராசி அதிபதி குரு பகவான் உச்சமடைய போகிறார் முக்கிய பணிகளை விரைந்து முடிப்பது நல்லது.வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். பொருளாதார நெருக்கடிகள் குறையத் துவங்கும்.

பல்வேறு வெற்றிகளைக் குவிக்கும் யோகமுண்டாகும். தொழில் அபிவிருத்திக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். அரசு ஊழியர்களுக்கு விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். பணி நிரந்தரம் ஆகாதவர்க ளுக்கு வேலை நிரந்தரமாகும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இல்லத்தில் பிள்ளைகளின் சுப விசேஷத்திற்கான பேச்சு வார்த்தைகள் நடக்கும்.23.4.2026 பகல் 3.13 மணி முதல் 25.4.2026 அன்று இரவு 8.01 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. உடல் அசதி அதிகரிக்கும்.தினமும் விநாயகர் கவசம் படிப்பது நல்லது.

மகரம்

ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்கிரன் ஆட்சி பலம் பெறுகிறார். வாழ்வில் நடந்த கெட்ட சம்பவங்களின் தாக்கம் குறையும். மற்றவர்களால் முடிக்க முடியாத செயல்களைக் கூட சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.உங்களுக்கு எதிராக செயல் பட்டவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள்.

குல தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும்.தொழில் போட்டிகள் குறையும். வியாபாரிகள் விற்பனையில் சாதுரியமாகப் பேசி சாதகமான பலனை அடைவார்கள். தொழிலில் எதிர்பாராத லாபங்கள் கிடைக்கும். பிள்ளை களுக்கு சுப விசேஷங்கள் செய்து பார்க்கக்கூடிய அமைப்பு உள்ளது.

புதிய நிலம், வீடு, வாகனம் மற்றும் நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்புண்டாகும். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். சிலர் புண்ணிய காரியங்களுக்கு பொருள் உதவி செய்வீர்கள். ஆரோக்கிய குறைபாடு அகலும். 25.4.2026 அன்று இரவு 8.01 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் பெரிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். சகோதர உறவுகளால் மன சஞ்ச லங்கள் உண்டாகும். தினமும் சிவகவசம் படிக்கவும்.

கும்பம்

புதிய முயற்சிகள் வெற்றி தரும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி புதன் குருவுடன் பரிவர்த்தனை பெற்று நீச்ச பங்க ராஜயோகம் பெற்றிருப்பதால் தனித் திறமையால் எதையும் சமாளிக்கும் பலமுண்டாகும். மாற்று இனத்தவரின் ஒத்துழைப்புடன் கூட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். ஜாமீன் பொறுப்பு ஏற்ற தொகை கைக்கு வந்து சேரும்.

வாழ்க்கைத் துணைக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு வாழ்க்கைத் துணை மூலம் பெரும் பணம் கிடைக்கும்.உயர் அதிகாரிகளின் அனுசரணையும் ஆதரவும் உண்டு.விலகிச் சென்ற உடன் பிறப்புகள் மீண்டும் இணைவார்கள். தம்பதிகளுக்குள் ஒருமித்த கருத்து நிலவும். பழைய சொத்தை விற்று புதிய சொத்து வாங்கும் நேரம்.

வாடகை வீட்டுத்தொல்லை இனி இல்லை. திருமணத் தடை அகலும். காதல் திருமணத்திற்கு பெற்றோரின் சம்மதம் கிடைக்கும். பிள்ளைகள் தொழில் உத்தியோகத்திற்காக இடம் பெயரலாம். மாற்று மருத்துவத்தில் ஆரோக்கியம் சீராகும். தொழில் மாற்ற சிந்தனை மேலோங்கும். சிலருக்கு தத்து புத்திர யோகம் உண்டாகும். வழக்குகள் சமாதானத்திற்கு வரும். தினமும் ஆஞ்சநேயர் கவசம் படிக்கவும்.

மீனம்

சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். ராசியில் சனி செவ்வாய் புதன் சேர்க்கை உள்ளது. வாரத்தின் முற்பகுதியில் பல வருடங்களாக நீங்கள் எதிர்பார்த்த ஒரு அற்புத சந்தர்ப்பம் உங்களை தேடி வரும். அந்த வாய்ப்பு உங்களுக்கு பெரிய வாழ்வியல் மாற்றத்தை தரப் போகிறது.

சிலர் காலத்தால் அழியாத படைப்புகளைப் படைத்து சாதனை படைப்பீர்கள்.வேற்று மொழி பேசுபவர்களுடன் அந்நிய தேசத்தில் குடிபுகுவீர்கள். ஒரு சிலர் பூர்வீகத்தை விட்டு இடம் பெயர நேரும்.சிலர் மதம் மாறுவார்கள். அதிக அலைச்சல் இருக்கும். போட்டி பொறாமைகள் அதிகமாக இருக்கும். திருமண முயற்சியில் சில தடை, தாமதங்கள் நிலவ வாய்ப்பு உள்ளது.

சிலருக்கு சிறு நோய் தாக்கம் உண்டாகலாம். ஒரு சில குடும்பங்களில் குல தெய்வ கோயிலில் யாருக்கு முதல் மரியாதை என்ற கருத்து வேறுபாடு ஏற்படும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.கணவன், மனைவியிடம் நல்ல புரிதல் நிலவும். தினமும் நவகிரக காயத்ரி மந்திரம் படிக்கவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com