திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம்

தேரோட்டத்தை முன்னிட்டு திருக்கழுக்குன்றம் நகருக்குள் வரும் அரசு பஸ்கள் புற வழிச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டன.
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம்
Published on

திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவில் மிகவும் சிறப்பு பெற்றது. இந்தகோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 21 -ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவை முன்னிட்டு பஞ்சமூர்த்திகளான விநாயகர், வேதகிரீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்பாள், முருகர், சண்டிகேஸ்வரர் என உற்சவமூர்த்திகள் தினசரி காலை, இரவு நேரங்களில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கடந்த 23-ந் தேதி 63 நாயன்மார்கள் கிரிவலம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட ஐந்து தேர்களில் முதலாவதாக ஸ்ரீ விநாயகர், வேத கிரீஸ்வரர், திரிபுர சுந்தரி அம்மன், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளினர்.

காலை 6 மணிக்கு, முதலாவதாக விநாயகர் தேரையும் அதனைத் தொடர்ந்து மற்ற தேர்களையும் பக்தர்கள் பெருந்திரளாக கலந்துக் கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் “சிவாய நம..., ஓம் நமச்சிவாய, வேதகிரீஸ்வரா..” என்று பக்தி கோஷங்கள் எழுப்பினர்.

தேரோட்டத்தில் திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். தேர்வரும் வீதிகளான மேட்டுதெரு, கருங்குழி சாலை, பெரிய தெரு, கம்மாளர் தெரு ஆகிய இடங்களில் பக்தர்களுக்கு நீர், மோர், தண்ணீர், பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

தேரோட்டத்தை முன்னிட்டு திருக்கழுக்குன்றம் நகருக்குள் வரும் அரசு பஸ்கள் புற வழிச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. பிற்பகல் ஐந்து தேர்களும் கோவில் முன்பு நிலையை வந்தடைந்தன.

ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மின்வாரியத்தினர் தேர்கள் செல்லும் பாதையில் உள்ள மின் வயர்களை பாதுகாப்புக்காக துண்டித்து இருந்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com