என் மலர்
வழிபாடு

சகல ஐஸ்வர்யங்கள் தரும் சர்க்கரை விநாயகர்
- தஞ்சையை ஆட்சி செய்த ராஜராஜசோழன், இக்கோவிலில் வழிபட்ட பின்புதான் எல்லா காரியத்தையும் தொடங்கி உள்ளார்.
- கோவிலின் மேற்கு பக்கமாக ராஜகோபுரம் காணப்படுகிறது.
திருவாரூர் மாவட்டம் கீழ வீதி பகுதியில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற சர்க்கரை விநாயகர் கோவில். சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் விநாயகப்பெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
தஞ்சையை ஆட்சி செய்த ராஜராஜசோழன், இக்கோவிலில் வழிபட்ட பின்புதான் எல்லா காரியத்தையும் தொடங்கி உள்ளார். அதன்பின்னர், அவர் வம்ச வழியினர் குடும்பத்தில் மகிழ்ச்சி தழைத் தோங்கியது. இங்குள்ள விநாயகரை வழிபட்டு பலன் அடைந்தவர்கள், சர்க்கரை படைத்து வழிபட்டனர். இதனால் இவருக்கு 'சர்க்கரை விநாயகர்' என்ற பெயர் ஏற்பட்டது. பின்பு, இவரை வழிபட்ட மன்னரையும், அவரது சந்ததியினரையும் வெற்றி பெற வைத்து காத்ததால், இவர் 'சந்ததிகளை காக்கும் சர்க்கரை விநாயகர்' என அழைக்கப்பட்டார்.
கோவிலின் மேற்கு பக்கமாக ராஜகோபுரம் காணப்படுகிறது. சுமார் நூறு பேர் அமர்ந்து விநாயகரை தரிசிக்கும் வகையில் மகாமண்டபம் அமைந்துள்ளது. விநாயகப்பெருமான் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கியவாறு அருள்பாலிக்கிறார். இவர் வெள்ளிக் கவசத்தில் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார். மகாமண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்து, விநாயகரை உற்று நோக்கினால், அவர் நம்மிடம் பேசுவது போல் தோன்றும். கோவில் தல விருட்சமாக அரச மரமும், நெல்லி மரமும் உள்ளன.
திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், நினைத்த காரியம் கைகூட நினைப்பவர்கள் இக்கோவிலுக்கு வந்து விநாயகரை வேண்டிக்கொள்கிறார்கள். அவ்வாறு வேண்டுதல் நிறைவேறியவர்கள், 108 தேங்காய் உடைத்தும், நெய் விளக்கேற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். சர்க்கரை, முக்கனி, சொர்ண அபிஷேகம் செய்தும், திராட்சை, வெற்றிலை, தேங்காய் படைத்தும், அருகம்புல், செம்பருத்தி போன்ற விநாயகருக்கு உகந்த மலர்களை சாற்றியும் வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களும் வந்துசேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருவாரூர் ரெயில் நிலையத்தின் அருகிலேயே இக்கோவில் அமைந்துள்ளது.






