திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்ட கொப்பரை இறக்கப்பட்டது

திருவண்ணாமலையில் தீபத் திருவிழாவின்போது மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை மலை உச்சியிலிருந்து இறக்கப்பட்டது. ஆருத்ரா தரிசனத்தன்று தீபச்சுடர் மை பக்தர்களுக்கு வழங்கப்படும்.
மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை மலையில் இருந்து இறக்கப்பட்ட போது எடுத்த படம்.
மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை மலையில் இருந்து இறக்கப்பட்ட போது எடுத்த படம்.
Published on

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு சிறப்பாக நடந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் கடந்த 19-ந் தேதி கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது. அந்த மகா தீபம் அன்றில் இருந்து தொடர்ந்து நேற்று அதிகாலை வரை 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளித்தது. மகா தீபத்திற்காக அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நெய், காடா துணி ஆகியவை அவ்வப்போது மலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

தீபத் திருவிழாவின்போது நேரில் வந்து தரிசிக்க இயலாத பக்தர்கள் மகா தீபத்தை காண நேற்று முன்தினம் இரவு வரை திருவண்ணாமலைக்கு வருகை தந்து தீப தரிசனம் செய்தனர். மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபத்தை நேற்று முன்தினம் மாலை சுமார் 6 மணியளவில் பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவில், கிரிவலப் பாதை மற்றும் உள்ளூர் மக்கள் அவர்களது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தரிசனம் செய்தனர். தொடர்ந்து நேற்று அதிகாலை வரை மகா தீபம் காட்சி அளித்தது.

மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை நேற்று காலை 2,668 அடி உயர மலை உச்சியில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. மலையில் இருந்து கோவிலுக்கு தீப கொப்பரை கொண்டு வரும் வழிநெடுகிலும் பக்தர்கள் அதனை தொட்டு வணங்கினர். தொடர்ந்து மாலை கோவிலில் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. வருகிற 20-ந் தேதி ஆருத்ரா தரிசனத்தன்று தீபச்சுடர் மை (தீப மை) அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளும் நடராஜருக்கு வைக்கப்படும். பின்னர் நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தீப மை பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com